பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

203


பாயிருந்தவர்தானே! எனினும்,இவர் தலைமைப் பதவியை எப்படியோ(?) பெற்றார். அதன் நடைமுறை எப்படி யிருந்திருக்கும்? டெல்லியில் நடந்த மாநாட்டிலும் அண்ணாவை அழைத்துக் கருத்துக் கேட்கவில்லை. அந்தக் குழுவினர் சென்னை வந்தபோதும் நமது கோரிக்கை என்ன, ஏன் பிரிவினை கேட்கிறோம் என்று கேட்டுப் பதிவு செய்து கொள்ளவில்லை. ஒருதலைப் பட்சமாகவே பரிந்துரை கூறி, விரைவில் நாடாளுமன்றத்தில் பிரிவினைத் தடை மசோதா கொணரக் காரணமாயிருந்தது இந்தக் குழு. கருத்தை அறிந்துகொள்ளவே அவ்வளவு அச்சம் அவர்கட்கு!

அண்ணா பிரிவினைத் தடைச் சட்டத்தின் சாதக பாதகங்களை நன்கு ஆராய்ந்தார். தன் அருமைத் தம்பிமார்களுடன் மனம் விட்டுப் பேசிக், கலந்து உரையாடினார். நானும் அவ்வப்போது இருந்து, என்கருத்தைச்சொன்னேன். பிரிவினைத் தடைச்சட்டத்தை மீறிச் சிறைசென்று ஆறேழு ஆண்டுகள் வாடுவதால், உருப்படியான பலன் என்ன? அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துக் காங்கிரசார் சிறை சென்றதற்கும், சுதந்திர இந்தியாவில் நாம் சிறை செல்வதற்கும், பயனைப் பொறுத்த வரையில் நிரம்ப வேறுபாடு உண்டே !

அண்ணாவை நான் அறிந்த நாட்களாய், அவர் இல்வளவு கவலையுடனும், எந்த நேரமும் சிந்தனை தேக்கிய முகத்துடனும் வேறு எப்போதும் இருந்ததில்லை. திராவிடர் கழகத்தினின்று விலக நேரிட்டதுபோதும் இந்த அளவு வேதனையுற்றதில்லை!

“ஏண்ணா! இப்ப, திராவிடநாடு கொள்கை இந்தியா பூராவும்-ஏன்-உலகம் பூராவும் தெரிஞ்சி போச்சி. இதையே லாபமா நெனச்சி, இப்படி ஜனநாயக விரோதமா ஒரு எதிர்க்கட்சியை அழிக்கவே இந்தச் சட்டம் கொண்டு வாராங்கண்ணு, அவுங்களை Expose பண்ணலாமே” என்று எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன்.