பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நான் பாடிய பாடல்

மூன்றாவது திராவிட மாணவர் பயிற்சிப் பாசறையை ஈரோட்டில் நடத்தி முடித்த நோம். பெரியார் ஏற்காட்டில் தங்கச் சென்றுவிட்டார். நான் ஈரோட்டில் குடி அரசு அலுவலகத்தில் இருக்கிறேன். அண்ணா வந்தால் சண்டை போடவேண்டும் என்று, துணையாசிரியர் மாணிக்கவாசகத்திடம் சொல்விக் கொண்டிருக்கிறேன். இவர் என்னிடம் கேட்டு, திருச்சி திராவிடமணி’ பத்திரி கைக்கு, அதன் ஆசிரியர் T. M. முத்து விரும்பியதாக, என் கவிதை ஒன்று வாங்கி அனுப்பினார். அதிலிருந்து முதல் இரண்டு பாடல்களை எடுத்து, யாரோ பி. முனுசாமி என்பார், “திராவிடநாடு” இதழுக்கு அனுப்பி, அது ‘திராவிடரின் சபதம்’ என்ற தலைப்பில் 15.4.1945 இதழின் முதல் பக்கத்தில் பிரசுரமாகியிருக்கிறது. இப்படியா எழுத்தைத் திருடுவார்கள்?

அண்ணா வந்தபொழுது படபடவென ஆரம்பித்தேன். அவர் நிதானமாக எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, “எங்கே சொல்லுய்யா கேட்போம். உன் பாட்டாயிருந்தா, இப்ப பாக்காமெ சொல்,” என்று என்னைச் சீண்டினார்.

பொறுத்திருந்த காலமெல்லாம் போதும்; இன்று
புவியெங்கும் கமையறியப் பொங்கிச் செல்வோம்!
வெறுத்தொதுக்க வேண்டிய வீண் நூற்களையும்,
வேறுபடும் மக்களையும் விலக்கித் தள்ளி
அறுத்தெறிந்து தளைகளெல்லாம் அகன்று நீங்க
ஆண்மையுடன் பொருதெழுந்து நமது தொண்டை
மறுத்தெதிர்க்கும் மதியிலிகள் மயங்கும் வண்ணம்
மானமுடன் வாழ்வதற்கே வழிகள் செய்வோம் ......