பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208

அண்ணா—சில நினைவுகள்


இது நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையோட பாடலுக்கு ள்திர்க்கருத்து. அவர் ‘இந்திய நாடு’ என்னுடைய நாடு: என்று பாடியிருந்தார். இதேபோல, ‘சூரியன் வருவது யாராலே’ என்று தொடங்கும் பாடல் ஒன்று அவருடையது.

அதை மாற்றி நான் எழுதினேன் :-

சூத்திரன் ஆனது யாராலே
சுதந்திரம் போனது எவராலே?
சாத்திரம் வேதம் இதிகாசம்
சமயநூல் புராணம் இவையேது
தோத்திரம் குலம்மதம் சாதியென்றே
கூட்டம்பிரித்தது யார்வேலை?
ஆத்திரம் இன்றி அடிமைசெய்தே
ஆட்சி புரிபவர் யாரிங்கே?!!

இதையும் அண்ணா கேட்டார்கள். “நீ அப்பப்ப கொஞ்சம் இதுமாதிரி இசைப்பாடலும் எழுதலாமய்யா” என்று சொல்லிப் புறப்பட்டார்கள்.

கலைஞர் கல்லக்குடிப் போராட்டத்திற்குப் புறப்படு முன் ஒருநாள், சேலத்தில் கோயம்புத்ததூர் லாட்ஜில், அவரோடு கே.ஆர். செல்லமுத்துவும், நானும் தங்கியிருந்தோம். அப்போது சென்னையிலிருந்து புரட்சி நடிகர் எம். ஜி. ஆர். வந்து கலைஞரைப் பார்த்து, தான் தனியே எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் என ஒரு படத் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்க விருப்பதால், மேகலா பிக்சர்சிலிருந்து விலகிக் கொள்ள அனுமதி கேட்டார். செல்லமுத்துவும் நானும் அவர்கள் இருவரும் தனியே பேசட்டும் என எண்ணி வெளியே போய் உட்கார்ந்தோம். “நாம், திரைப்படத்தில் வரும் ‘மாரி மகமாயி’ மெட்டில் ஒரு பாட்டு எழுதுங்க அண்ணே! நான் பாடறேன்” என்றார் செல்லமுத்து. உடனே நான் எழுதித் தந்தேன். 1953ல் நிறைய மேடைகளில் முழங்கினார் இந்தப் பாடலைச் செல்லமுத்து.