பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216

அண்ணா—சில நினைவுகள்


அந்தத் தயக்கம் காணப்படவில்லை. இயல்பாகப் பழகினார்கள். என் ஒரே தங்கையின் கணவர் பழநிவேலு, அவரது அக்காளின் கணவர் டி. ஆர். பாலசுப்ரமணியம், இவர்கள் எல்லாரையும் மற்றும் குடும்பத்தினரையும் அண்ணாவுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். அப்போது பரமசிவம் எடுத்த புகைப்படங்கள் நன்றாக இருக்கின்றன, அவன் வீட்டு மாடியிலேயே எடுக்கப்பட்டவை.

அன்று அண்ணா அவர்களிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட என் தங்கை கணவர் பழநிவேலு, ஏற்கனவே கலைஞருக்குத் தெரிந்தவர். தாம்பரம் ரயில்வே காலனி யில் பல ஆண்டுகள் வசித்தவர். முனு ஆதி தாம்பரத்தில் பால் வியாபாரம் செய்து வந்தபோதே தெரியும். அவர் அன்று மிகவும் களிப்புக்கடலில் மிதந்து கொண்டிருந்தார். சென்னை பெசண்ட் நகர் அமைக்கப்பட்ட போது, வீட்டுவசதி வாரியத்தின் முதல் தொகுதி வீட்டிலேயே குடியேறியவர். மஞ்சட்காமாலை நோய்க்குப் பலியாகி 1969-சனவரி 29 அன்று சென்னை பொது மருத்துவமனையில் இயற்கை எய்திவிட்டார். என் வாழ்வில் இதனினும் பெரிய சோகம் இதுவரை ஏற்படவில்லை. அண்ணா அவர்கள், நோயின் கடுமையான பிடியில் சிக்கி அவதிப்பட்டு, அடையாறு மருத்துவமனையில் இருந்த அதே காலகட்டத்தில், இவர் G. H-ல் இருந்தார். இரண்டு ஆடுகளில் ஊட்ட நினைத்த குட்டியைப்போல நான் பரிதவித்தேன். ஓரிடத்தில் வீட்டுத் தலைவர். ஓரிடத்தில் நாட்டுத் தலைவர். இருவர் நலிவும் நான் வருந்திக் குமைந்து நைந்துருகச் செய்தவையாகும். டாக்சியில், ஒருநாளில் பலமுறை, இரு இடங்களுக்கும் விரைவேன். ஆயினும், அண்ணா நம்மை ஏமாற்றிச் செல்வதற்கு நான்கு நாள் முன்னரே, என் வீட்டு மாப்பிள்ளை தனது நாற்பத்து அய்ந்தாவது வயதிலேயே எங்களைப் பிரிந்தார். துயரச் சிறுபொறி பெருந்தீயாக மாறிச் சுட்டெரித்ததில், என் உள்ளம் சாம்பலாகிப் பறந்தது அடுத்த சில நாட்களில்!