பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226

அண்ணா—சில நினைவுகள்

சென்னையில் நடைபெற்ற முதல் மாநில மாநாட்டில் தலைமையுரையாற்ற எழுந்த அண்ணா “இந்த நேரத்தில் நம்மையெல்லாம் ஆளாக்கி, உருவாக்கிய பெரியார்......” என்று அதற்கு மேல் தொடர இயலாமல் கண்ணிர் சிந்த வில்லையா?

இதே போன்றுதான், குழித்தலையில் கலைஞர் போட்டியிட்ட 1957-ல் இரண்டு முறை, பெரியார் காங்கிரஸ் காரர்களின் அழைப்பினை ஏற்று வந்து கூட்டங்களில் பேசினார்; நான் கலைஞரின் தலைமைத் தேர்தல் அலுவலக நிர்வாகியாதலால், வெளியில் செல்வதில்லை; இரண்டு பொதுக்கூட்டங்களையும் கேட்டேன்; அய்யா கலைஞரை எதிர்த்து அங்கே ஒரு சொல் கூட உதிர்க்க வில்லை!

இது இருக்கட்டும்; 1950-ல் ‘பெரியார் பொன்மொழிகள்’ வழக்கில் அய்யாவும், ஆரியமாயை வழக்கில் அண்ணாவும் தண்டிக்கப்பட்டுத் திருச்சி சிறையிலிருந்த போது, அய்யா, அண்ணாவுக்கு பிஸ்கட், பழங்கள் அனுப்பியதும் 28.9.1950-ல் விடுதலையானபோது அண்ணாவுக்குக் கார் வராததால், அய்யாவே தம் வேனில் அழைத்துச் சென்று அண்ணாவைச் சங்கரன் பங்களாவில் விடச் சொன்னதும், தி. மு. க. பிரிந்த பிறகுதானே?

1956-ல் திருச்சி மாநில மாநாட்டில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் கலைவாணர் என். எஸ். கே. அவர்கள் பாடும் போது

புத்தர் சொன்னதும் அய்யா சொல்வதும் ஒன்று
அய்யா சொல்வதும் அண்ணா சொல்வதும் ஒன்று
இந்த இருவரும் இணைந்தால் மிகவும் நன்று

என்று குறிப்பிட்டார். பிறகு அண்ணா இதுபற்றிப் பேசிய பொழுது “நாங்களிருவரும் இணையவேண்டும் என்ற கலைவாணர் பாடினார். இணைவோமா என்னும்