பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

அண்ணா—சில நினைவுகள்


‘எனக்கு எத்தனை மனைவி? எத்தனை பிள்ளைகள் இருக்கும்?’ என்றெல்லாம் சம்பத் கேட்கக் கேட்க, அந்தப் பகுதியில் ஒரே சிரிப்பு: கும்மாளம்! அண்ணாவும் எங்களோடு சேர்ந்து உரக்கச் சிரிக்கிறார்!

டி. வி. என். கோபத்தின் உயர் எல்லைக்கே போய் விட்டார். மிகமிக உரத்த குரலில், “ஏன் சிரிக்கிறீர்கள்? என் பேச்சில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது? உயிரைக் கொடுத்து உயர்வான கருத்துகளை எடுத்து வைக்கிறேன், கேட்கவேண்டாமா? இதுதான் நாகரிகமா?” என்றெல்லாம் அண்ணாவைப் பார்த்தும் கேட்கிறார்! அண்ணா அவர்களிடம் மிகுந்த அன்பும் மரியாதையும் உள்ள அவரே, தன் வயமிழந்து போனார். “அண்ணா, இருங்க!” என்று, எழப்போன அண்ணாவை, அப்போதும் சம்பத் தடுக்கிறார். அண்ணா, சம்பத்தின் கையை விலக்கி விட்டு, மேடையை நோக்கிப் போனார்கள். டி. வி. என் அத்தோடு உட்கார்ந்து விட்டார், சினம் ஆறாததால்!

ஒருமணி நேரம் அந்த நள்ளிரவிலும் அண்ணா சொன்மாரி பொழிந்தார்கள். எல்லாருக்கும் தூக்கம் கலைந்து போயிற்று. சம்பத்தும் அமைதியாயிருந்தார்.

ஆனால், அடிக்கடி மற்றவர்களை கேலிப்பொருளர்க்கி நகைப்பதும், அண்ணாவிடம் தனக்குள்ள செல்வாக்கினால் பொது இடங்களில், அவரையும் தன் வசப்படுத்திக் கொண்டு, பிறரை ஏளனம் செய்ய முற்படுவதும், சம்பத்துக்கு ஒரு கெட்ட பழக்கமாகவேயிருந்தது. அதனால், அவருடைய எவ்வளவோ நல்ல தன்மைகள் மறைக்கப்பட்டு, மற்றையோரின் அருவெறுப்புக்கு ஆளாக நேர்ந்தது! அண்ணாவின் பெருந்தன்மையும் துணை போனதுதான் வேதனை இதிலே!