பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230

அண்ணா—சில நினைவுகள்


அவருக்கு இதிலே ஒரு திருப்பம். அவுங்க, அய்யாவை நல்லா கவனிச்சிக்கிட்டாங்க. அவுங்க இல்லேண்ணா நாம அய்யாவை எப்பவோ பறிகொடுத்துட்டுப் பரிதவிச்சிருப்போம். இவ்வளவு நாள் உயிரோட பாத்திருக்கவே முடியாது. அய்யா எவ்வள்வு நாள் இன்னும் வாழ்றாரோ அவ்வளவுக்கும் நமக்கு நல்லது! பாத்துக்குங்க-” என்று முடிக்கும்போது அவர் குரல் கரகரத்தது. உணர்ச்சி மீதுற, நாக்குழறியது. எதிரிலிருந்த இருவரும் உடனே எழுந்து, மேலும் அண்ணாவுக்குத் தொந்தரவு தர வேண்டாமென எண்ணி, விடைபெற்றனர்.

‘புதிய அன்னிபெச்ன்ட் புறப்படுகிறார்’ என்று 1949-ல் மண்ணியம்மையாரை வர்ணித்த அண்ணா இவர்தானா என்று, அவர்கள் இருவரும் கருதி, வியந்துகொண்டே சென்றிருப்பார்கள் என நான் எண்ணிச் சிந்தனையில் மூழ்கினேன். -

கல்வெட்டுச் சாசனமாய்ப் பொறித்து வைக்கத்தக்க ஒரு கடிதத்தை அண்ணா நியூயார்க் மருத்துவ மனையி னின்று பெரியாருக்கு எழுதினாரே. அதன் இறுதிப்பகுதியில் என்ன சொன்னார்:

“தங்கள் பணி மகத்தான விழிப்புணர்ச்சியைச் சமூகத்தில் கொடுத்திருக்கிறது. புதியதோர் பாதை மக்களுக்குக் கிடைத்திருக்கிறது. நான் அறிந்த வரையில் இத்தனை மகத்தான வெற்றி வேறு எந்தச் சமூக சீர்திருத்தவாதிக்கும் கிடைத்த தில்லை; அதுவும் நமது நாட்டில். ஆகவே சலிப்போ கவலையோ துளியும் தாங்கள் கொள்ளத் தேவையில்லை. என் வணக்கத்தினைத் திருமதி மணி அம்மையார் அவர்களுக்குத் தெரிவிக்கவும். அன்பு வணக்கங்கள்.
தங்கள் அன்புள்ள அண்ணாதுரை. நியூயார்க் 10.10-68.”