பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242

அண்ணா—சில நினைவுகள்


படத்தைப் பென்சிலால் வரைந்து, என்னிடம் கொடுத்து, அதில் அண்ணாவின் கையெழுத்துப் பெற்றுத் தருமாறு வேண்டினான்.

பொங்கலுக்குப் பிறகு ஊரிலிருந்து அந்தப் படத்தை எடுத்து வந்து, அண்ணாவிடம் காண்பித்துக், கையெழுத் திடுமாறு வேண்டினேன். அப்போது, அண்ணாவின் நோய் முதிர்ச்சியுற்ற நிலையில், வேலூர் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்ல ஏற்பாடுகள் விரைவாக மேற் கொள்ளப்படும் தருணம். “சண்முகத்திடம் கொடுத்து, என் காரில் வைக்கச் சொல். பார்க்கிறேன்!“ என்றார் அண்ணா.

ஒட்டுநராயிருந்த சண்முகம் அதை என்னிடமிருந்து வாங்கி வைத்துக் கொண்டார். “சரியண்ணே! நான் கையொப்பம். வாங்கித் தாரேன்!” என்று. அவ்வளவு தான். அது என்ன ஆயிற்றோ? கடைசி நேரத்தில் அண்ணா வேலூருக்குப் புறப்பட மறுத்துவிட்டார்கள்!

கலைஞரும் மற்ற அமைச்சர்களும் பரபரப்பாகக் கலந்து ஆலோசித்தனர். கலைஞர், அடையாறு மருத்துவ மனையில் மடமடவென ஒரே நாளில் அறை முதலிய வசதிகள் தயார் செய்ய முனைந்தார். அண்ணா ஒத்துக் கொண்டார்கள். விரைவாக வந்து காரில் ஏறினார்கள். நான் பின்னால் வந்த கலைஞரின் காரில் உட்கார்ந்து கொண்டேன்.

முன்னிரவு நேரத்தில் அடையாறு மருத்துவ மனைக்குப் போய்ச் சேர்ந்தோம். முதல்காரில் இருந்த அண்ணா மிடுக்குடன் இறங்கிச், சிங்க ஏறு போல் விறு விறுப்புடன் நடந்து, தமது அறைக்குள் நுழைந்தார்கள். நான்அத்தோடு பின் தொடர்வதை நிறுத்திக்கொண்டேன். விழிகள் நிறையும் வரை அந்த வேந்தனின் பின்னழகை விழுங்கினேன்.

அண்ணா எனும் அந்த ஒப்புவமை உரைக்க வொண்ணாப் பேருருவின் உயிர்ப்புத் துடிப்புள்ள உடலத்தை மீண்டும் எங்கே தாணமுடிந்தது?