பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

249


மரியாதையும் ஆசையும் மிளிர வரவேற்று, அரசியல் பேசத் தொடங்கும் அவர்களின் நுண்ணறிவைப் பாராட்டாதார் யார்?......

என்ன துயர் பட்டேனும் அன்னை உயிர் மீட்கலாம் என்ற ஆசை அலைமோதிய நெஞ்சங்கள் அனல் கக்கும் எரிமலைகளாய் உருமாறி, அம்மா என்றும் ஆத்தா என்றும் அத்தை என்றும் அழைத்துக் களித்த அன்புருவங்கள் என்புதோல் போர்த்த கூடுகளாய் ஏங்கிப் பின்னின்று தவிக்கின்ற அவலநிலை, கால ஒட்டத்தில் தெளிவு பெற’ அம்மா! உங்கள் சிந்தனை எங்கள் உளத்திற்கு உரம் ஊட்டுவதாக!”

நேரு மறைவிற்கு அண்ணா சிறையிலிருந்து வழங்கிய இரங்கலுரை இது :-

“உலகப் பெருந்தலைவர்கள் வரிசையில் சிறப்புமிக்க இடம்பெற்று இந்தியத் துணைக் கண்டத்துக்குத் தனிப் புகழிடம் தேடிக் கொடுத்துப் பூசல்கள் பிளவுகளால் நாடு கேடடையாமல் பாதுகாத்துப் பொருளாதாரச் சீர்குலைவு ஏற்படாமல் தடுத்து வந்த மாபெரும் காவலர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள்.

நேரு பெருமகனாருக்கு நாம் காட்ட வேண்டிய மரியாதை உணர்வைச் சொல்லாலும் செயலாலும் நேர்மையாலும் நன்னெறியாலும் அனைவரும் எடுத்துக் காட்டக் கடமைப்பட்டுள்ளோம்."