பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

அண்ணா—சில நினைவுகள்


சி. டி. எம். உதவினார். மைக் ஓரிடம், ஆம்பிளிஃபயர் வேறிடம், ஒலிபெருக்கிக்குழாய் இன்னோரிடம்-என்று சேகரித்துக்கொண்டு, எப்படியோ நேரத்துக்கு வந்து சேர்ந்தார் சி. டி. மூர்த்தி.

என் மாமனார் வைதிகர் ஆனதால், அண்ணாவை விரும்பமாட்டார் என்று யாரோ தவறாகச் சொல்லி யிருந்திருக்கிறார்கள். அந்தக் கருத்துக்கு மாறாக, அவரே மாலைசூட்டி எல்லாரையும் வரவேற்றது, அனைவர்க்கும் வியப்பினை அளித்தது!

குடந்தைப் பெரியவர் கே. கே. நீலமேகம் அவர்கள் தலைமையில் எல்லாரும் வாழ்த்தினார்கள். இறுதியாக அண்ணா. பேசும்போது-(அய்யோ, அந்தக் காலத்தில் டேப்ரிக்கார்டர் இல்லாமல் போயிற்றே?) என்னைப்பற்றிப் புகழ்ந்தே முதலில் அரைமணி நேரம் அருமையாக உரையாற்றினார். பகிரங்கமாக, ஒலிபெருக்கி முன்பு, என்னைப் பாராட்டி, அண்ணா சொற்பொழிவாற்றியது அந்த ஒருமுறைதான்! இப்போது நினைத்தாலும் நெஞ்சம் புகழ்ச்சியால் நெகிழ்கிறது. பெருமிதத்தால் விம்முகிறது. களிப்பால் பூரிக்கிறது. ஏற்கனவே, நான் சுயமரியாதைக் காரன் என்று தெரிந்தும், என் நல்ல பண்புகளைக் கேள்விப்பட்டுத் தமது பெண்ணைக் கொடுக்க முன்வந்த என். மாமனார், அண்ணா அவர்களின் நற்சான்று மொழிகள் கேட்டு, மேலும் உருகிப்போனார். மகிழ்ச்சியில் திளைத்தார்.

தலையில் குடுமி, காதில் கடுக்கண், நெற்றியில் திருநீறு, மேலே சட்டையணியாத உடல், சவரம் செய்து கொள்வதுகூட நாள் பார்த்துதான்; கோவில் டிரஸ்டி வேறு! தொழில் வட்டிக் கடை, ரங்கூனில் சிறிது காலம் வாழ்ந்தவர்; சங்கராச்சாரியரின் அன்பர்-தம்புசாமிப் பிள்ளை தன் பெண்ணைக் கருணானந்தத்துக்குத் தருவது சுந்தரமூர்த்திப் பிள்ளையோடு செய்யும் சம்பந்தமல்ல.