பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

254

அண்ணா—சில நினைவுகள்


விருந்தவாறே அண்ணா, தன் மக்கள் திரளை நோக்கிக் கையசைக்கிறார். பெரியாரைப் பார்த்ததும், சட்டென்று காரை நிறுத்தச் சொல்லவும் தோன்றாமல், ஒடும்போதே இறங்கிவிடும் எண்ணத்தில் கதவைக் கூடச் சிறிது திறந்து விட்டார். பெரியார், இறங்க வேண்டாமெனச் சைகை செய்து, “போய் வாருங்கள்” என்று கைகுவித்து வணக்கம் சொல்லிப் பிறகு, கையசைத்து வாழ்த்தி விடை தந்தார்.

'அண்ணாவின் அறுபதாம் ஆண்டு பிறந்த திருநாள்' என்ற தலைப்பில், “அறிஞர் அண்ணா என்று பாராட்டுவது அவரதுஅறிவின் திறம்தான் காரணம். தனதுஅமைச்சரவை யில் பார்ப்பனர் ஒருவரையும் சேர்க்கவில்லை என்பதோடு, தி. மு. க. வுக்கு மாறான கொள்கையுடைய தமிழரையும் போடவில்லை” என்று பெரியார் பாராட்டி எழுதினார் “விடுதலை” யில்.

அறுவை சிகிச்சைக்குப் பின் சிலவாரம் ஒய்வெடுத்த அண்ணா 6.11.68 சென்னை திருப்பினார். மறுநாள் தமது அருமை அன்னையாரைக் காணக் காஞ்சி சென்றார். நலம் பெற்றுவிட்டார் என்று நம்பிய தமிழகம் சென்னையில் திரண்டு அண்ணாவை வரவேற்று மகிழ்ந்தது. அப்போது சென்னை மாநகரில் இல்லாத பெரியார், 11-ஆம் நாள் வந்து, நேரே நுங்கம்பாக்கம் இல்லத்திற்கு விரைந்தார். உடன் மணியம்மையார், வீரமணி, என். எஸ். சம்பந்தம் வந்திருந்தனர். அண்ணா மிகவும் சங்கடத்துடன், “நான் வந்து அய்யாவைப் பார்க்க வேணும்னு இருந்தேன். அதுக்குள்ள நீங்க முந்திக் கொண்டிங்களே” என்று கூறிக் கொண்டே எல்லாருடைய முகத்தையும் நோக்கினார். அண்ணாவின் உடல் இளைத் திருந்த போதிலும், அகன்ற நெற்றிப் பரப்பின் அடிபீடத் தில் சுடர்விடும் பெரிய விழிகளின் ஒளி எப்போதும் போல் பிரகாசித்தது. ஒரு ஆப்பிள் பழத்தை எடுத்து அண்ணா