பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பத்திரிகை பலமும் பேச்சாளர் எண்ணிக்கையும்

ண்ணா முதலமைச்சராகிச் சில நாட்களுக்குப் பின் ஒருநாள் இரவு 9 மணியிருக்கும். அண்ணா அவர்களின் வீட்டு மாடியில் ஒரு சிறு கூட்டத்தில் நானும் இருக்கிறேன். தொலைபேசி அழைப்பு. நேர்முக உதவியாளர் நண்பர் கஜேந்திரன் அண்ணாவிடம் வந்து உட்கார்ந்துகொண்டு, “அண்ணா! ஆதித்தனார் கேட்கிறார், நீங்கள் அவர் வீட்டில் சாப்பாட்டுக்காகப் புறப்பட்டு விட்டீர்களா என்று! கருணாநிதியும் வரவேண்டுமாம். நேரமாகிவிட்டது என்கிறார்!” என்று, தான் P. A. என்பதை வழக்கம்போல் மறந்து பேசுகிறார்.

“சரி வாருங்கள்-இப்போது புறப்படாவிட்டால்அவரே நேரில் வந்து விடுவார். நீயும் வாய்யா!” என்றார் முதலமைச்சர் அண்ணா என்னிடம்.

“நான் வல்லேண்ணா-அவர் எனக்கு அறிமுகமே கிடையாது...” என்றேன்.

“பரவாயில்லை-என்னோடு வா. நிச்சயம் பிரியாணி யாவது இருக்கும்’ என்று என்னை இழுத்தார். அதற்கு மேலும் ‘பிகு’ செய்யலாமா?

அடையாறு போய்ச் சேர்ந்தோம், நுங்கம்பாக்கத்தி லிருந்து. வாயிலிலேயே வரவேற்றார். அண்ணாவுடன் கலைஞர் வந்திருக்கிறாரா என்பதை மட்டும் கவனித்தார். மற்றவர்களை அவர் கண்டு கொள்ளவேயில்லை!

கூடத்தில் தரையில் இலை போட்டுச் சாப்பாடு. அண்ணா சொன்னதுபோல் பிரியாணி பரிமாறப்பட்டது.