பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
புதிராகப் பார்த்த சினிமா

மாயூரத்திற்குக் காரிலேயே அண்ணா வந்துவிட்டார்கள் காலையிலேயே. நண்பர் G. R. அவர்கள் வீட்டில் தங்கி யிருந்தார்கள். கொத்தங்குடி ராமச்சந்திரன் (ஜி.ஆர்.) சரோஜா பரிமளத்துக்கு அண்ணன் முறை உறவினர்; காவேரி நகரில் வாடகை வீடுதான். நல்ல சைவ சாப்பாடு கிடைக்கும் அங்கே.

அண்ணா அன்றையதினம் மாலையில் காரைக்கால் பொதுக் கூட்டத்தில் பேசவேண்டும். “அண்ணா! காரைக் கால் கூட்டம் மாலையில் முன்நேரத்திலேயே தொடங்கி, 8 மணிக்குள் முடித்துவிடவேண்டும். அதற்குமேல் பேசினால் கேட்பவர்கள் எண்ணிக்கை ‘இரண்டு மடங்கு’ ஆகிவிடும்— என்று கலைஞர் கேலியாகச் சொல்வார். ஆனாலும் அது உண்மைதான். சீக்கிரம் புறப்படுவோம்” என்றேன்.

முன் இருக்கையில் அண்ணா. பின் இருக்கையில் ஜீயாரும் நானும். பேரளம் வழியாகக் கார் சென்றது. காரைக்கால் பொதுக்கூட்டம், நாங்கள் ஏற்கெனவே பேசிக் கொண்டவாறு 8 மணிக்கெல்லாம் முடிந்துவிட்டது. உடனே அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த வழக்கறிஞர் காரைக்கால் ராமசாமி வீட்டுக்கு அழைத்துச் செல்லப் பட்டோம். நண்பர் ராமசாமி பின்னாளில் சிறிது காலம் புதுவை மாநில முதல்வராக இருந்தாரென நினைவு. அண்ணாவின் வருகையினால் அளவிலாப் பூரிப்பும் பெருமையும் புளகாங்கிதமும் பொங்கிடத் தமது இல்லத்தில் பிரமாதமான பிரியாணி விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் ராமசாமி. நேரம் நிறைய இருப்பதால், அண்ணாவுடன் சாவகாசமாகப் பேசிக்கொண்டிருக்க