பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

27


இயலும் என்று நம்பிய இராமசாமிக்கு ஏமாற்றம் ஏற்படுத்தும் வகையில், அண்ணா மிகவும் பரபரப்பும் விரைவும் வெளிப்பட, “ராமசாமி! சிக்கிரம் சாப்பாடு போடு! நாங்கள் போகவேண்டும்” என்றார்கள்.

எனக்கும் ஜீயாருக்கும் பகீரென்றது. ஏனென்றால், நாங்கள் இரண்டு பேருமே புலால் உணவை வெளியில் கிடைக்கிற இடத்தில் ஒருகை பார்க்கிற ஆட்கள்! பிரியாணி வாசனையோ ஆளைத் தூக்குகிறது. அண்ணா சாப்பிட விடமாட்டார்கள் போலத் தெரிகிறதே என்கிற ஏக்கம் எங்களுக்கு.

ஒருவாறு சாப்பிட்டதுமே, அண்ணா போய்க் காரில் அமர்ந்துவிட்டார்கள். எங்கள் இருவருக்கும் ஒன்றும் விளங்கவில்லை; அண்ணாவிடம் கேட்பது நாகரிகமன்று. மாயூரம் சென்று ஒய்வெடுக்க வேண்டுமோ, என்னவோ? சரி, போகவேண்டியதுதான்!

கார் புறப்பட்டுத் திருநல்லாறு வரும்போது ஒரு டயர் பங்ச்சர் ஆகிவிட்டது. “என்னய்யா, என்னய்யா?” என்று அண்ணா பதைக்கிறார்கள். சீக்கிரமாகவே ஸ்டெப்னி சக்கரத்தை எடுத்து மாட்டி, டிரைவர் மீண்டும் பயணம் தொடர்கிறார். பேரளம் கண்ணுக்குத் தெரிகிறது. “இது பேரளம்தானே? சாயுங்காலம் வரும்போதே கவனிச்சேன். இந்தத் திருப்பத்திலே தெரிகிற தியேட்டரில் “அன்பே வா” நடக்கிறது. இதை ஊரிலேயே பார்க்க நினைச்சேன். பார்க்க முடியவில்லை. இங்கே பார்க்கலாமே என்றுதான் காரைக்காலில் அவ்வளவு அவசரப் படுத்தினேன். அப்போதே சொல்லியிருந்தால் உங்களுக்குச் சப்பென்று போயிருக்கும்; என்ன, பார்க்கலாமா?” என்றார் அண்ணா ஜீயாரிடம்.

அப்பாடா! எங்களுக்குப் புதிர் விடுபட்ட நிம்மதி. “கொஞ்சம் நீங்கள் காரிலேயே இருங்க அண்ணா. மேனேஜர் எனக்குத் தெரிஞ்சவர்தான் போய் இடம்