பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

45


திருமண வீட்டார் எதிர்பார்த்தபடி முதல் நாளிரவே இயலாவிட்டாலும், விடிவதற்குள் அண்ணாவை அவர்கள் கண்களில் காண்பித்து விட்டதால், எனக்கு நிரம்பப் பாராட்டு! அண்ணாவைச் சிறிதுதுரங்க அனுமதித்தார்கள்; ஆனால் என்னைத் துரங்கவிடவில்லை!

கையில் காகிதமும் பேனாவும் தந்து, எதிரிலுள்ள தோட்டத்திற்கு இட்டுச் சென்றார் சந்தானம். “கவிஞரே! சாயங்காலம் மதுரை சோமு கச்சேரி இருப்பது உங்களுக்கும் தெரியும். அவரும் இப்போதே இங்கு வந்துவிட்டார். அவரைக் கேட்டதில், அவருக்குக் கழகப்பாடல் ஒன்றும் தெரியாதாம். நீங்க ரெண்டு பாட்டு எழுதித் தாங்க. அண்ணா முன்னால பாட அவர் விரும்புறாரு” என்றார் மணமகன் ராசகோபால். நினைவாற்றல் மிக்க நண்பர் ராசகோபால் இப்போது இருந்தால் நான் அன்றைக்கு எழுதித் தந்த பாடல்களை அப்படியே ஒப்பிப்பார். நான் அப்போது எழுதித்தந்ததை மறந்துவிட்டேன். ஒரு பல்லவி மட்டும் நினைவில் நிற்கிறது :

மூன்றெழுத்து மந்திரத்தை மொழிவாய் என் தோழி-திராவிட
முன்னேற்றக் கழகம் என்றும் நமக்காக வாழி!”

-இன்னொன்று, விருத்தம். இரண்டு பாடல்களையும் இசைமேதை மதுரை சோமு, அழகுறத் தாமே இசை யமைத்து இன்பமாய்ப் பாடினார் மாலை இசையரங்கில்.

அண்ணா ஊருக்குத் திரும்பிடப் புறப்படுகையில் “என்ன கருணானந்தம், போவோமா!” எனக் கேட்க, நான் வரவில்லை எனத் தலையசைத்தேன். “அவ்வளவு தானா; தேர்தல் நேரத்தில் ஒட்டுப் போட வாக்காளரை அழைத்து வரக் கார் தந்து, திரும்பும்போது, நடந்து போகச் சொல்வார்களே-அப்படியா?“ என்று நகைச்சுவை வழங்கினார்கள். அப்படியில்லையண்ணா திரும்பிப் போக உங்களுக்கு அதே காரைத் தருகிறார் ஜமால்!” என்று கூறி வழியனுப்பி வைத்தோம்.