பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

v

எழுத முனையாதபோது, நாம் "அண்ணா-சில நினைவுகள்" எழுதலாமா? சரி. நாம் எழுதிய பின்னரே னும் இவர்கட்கு ஒர் உந்துதல் ஏற்பட்டு, அதனால் மேலும் அண்ணாவைப்பற்றிய உண்மையான சில நூல்கள் வெளி வரட்டுமே, எனத் துணிந்தேன்.

நவம்பர் திங்கள் முழுவதும் என் நினைவாற்றலை நன்கு தூண்டிவிட்டு, நாள்தோறும் முற்பகல் ஒன்றும், பிற்பகல் ஒன்றுமாக எழுதினேன். எழுதி முடித்த பின் என் துணைவியாருக்கு மட்டும் படிக்கத் தருவேன். அவர்கள் முகத்தில் நிறைவைக் கண்டதும், தலைப்புச் சூட்டுவேன். பின்னர் இருமுறை படித்துப் பார்த்து: நானே முழுநிறைவு பெறும்வரை திருத்தங்கள் செய்வேன். இப்படியாக அனைத்தையும் ஒரே மாதத்தில் நிறைவேற்றி, அச்சுக்குத் தந்தேன்.

சிறுகதை உத்தியையும், நாடக உத்தியையும் நிறையக் கையாண்டேன். உரையாடல்களை மய்யமாகக் கொண்டே இதனை அமைக்க வேண்டியிருந்ததால், சுவை குன்றாமலிருக்க, எளிய இயல்பான நடையிலேயே எழுதியுள்ளேன்.

என் மாமனார் மன்னார்குடி சி. தம்புசாமி அவர்கள் நினைவிற்கு இந்நூலை உரித்தாக்குகின்றேன்.

நானே வெளியிட்டு, உங்கள் கரங்களில் இந் நூலினை வழங்கிட உதவிய மூவேந்தர் அச்சகத்தார்க்கும், ஒவியர்க்கும், புகைப்பட வல்லுநர்க்கும் நன்றி.

1969 பிப்ரவரி 3 ஆம் நாள்வரையில் நாம் எல்லாரும் எப்படியிருந்தோம் என்பதைத் திரும்பிப் பார்த்துக் கொள்ளவும் இந்நூல் உதவி செய்யும் என நம்பி, என் நினைவில் தேங்கி நின்ற உண்மை வெள்ளத்தைத் திறந்து வடியவிட்டிருக்கிறேன். மறதியினால் ஏதாவது பிழை ஏற்பட்டிருப்பின் பொறுத்தருள வேண்டுகிறேன்.

அன்புடன்
S. கருணானந்தம்