பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

63


பயணியர் விடுதியில் தங்கினார்கள். தயாராக அங்கிருந்த அன்பிலைத் தனியே கூப்பிட்டு “பிளாசா தியேட்டரில் என்ன படம்? போய்ப்பார்த்துத் தெரிந்துகொண்டு, டிக்கட் வாங்கி வா, மாலைக் காட்சியே பார்க்கலாம்” என்று ரகசியமாகச் சொன்னார்கள். மகிழ்வோடு விரைந்து சென்று அதைவிட மகிழ்ச்சியுடன் திரும்பி வந்தார். “இப்போதே போனால் சரியாயிருக்கும் அண்ணா” என்று அவசரப்படுத்தினார். “இப்ப வேணாய்யா, வெளிச்சமா யிருக்கு. லைட்டெல்லாம் ஆஃப் செஞ்சி, படம் ஆரம்பிச்சப்புறம் போகலாம்” என்று சொல்லி விட்டார்கள்.

அதேபோலக் காவலர் பரிவாரங்கள் இல்லாமல், மிக அமைதியாகத்தான் இருளில் உள்ளே சென்று அமர்ந்து கொண்டோம். இடைவேளைவிட்டு, விளக்குகள் எரியத் தொடங்கின. எப்படித்தான் மக்கள் தெரிந்துகொண்டார் களோ? இங்கே வந்து குழுமிவிட்டனர் எல்லாரும்! வணக்கங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. வசதிக்காக இடைவேளை நேரம் அதிகரிக்கப்பட்டும், மக்கள் திரும்பி அவரவர் இருக்கைக்குச் செல்வதாகத் தெரியவில்லை. அன்பில் வெளியே சென்று தியேட்டர் மானேஜரைப் பார்த்துப் படத்தைத் தொடரச் செய்தார். ஒருவழியாக அமைதி வந்தது.

நான் அண்ணாவைப் பார்த்து ஒரேயடியாகச் சிரித்தேன். “என்னய்யா இப்படிச் சிரிக்கிறே!” என்று கேட்டார்கள். “பின்னே என்னண்ணா? ஒரு முதலமைச்சர் இப்படித் தியேட்டரில் சினிமா பார்க்க வந்துவிட்டாரே! என்று மக்கள் உங்களைப் பற்றித் தவறாக நினைக்க மாட்டார்களா?” என்றேன் சிரிப்பை அடக்கிக் கொண்டு. “நீ அப்படி ஏன்யா நெனக்கிறே? நம்ம அண்ணா, என்னதான் முதலமைச்சரானாலும், பந்தா இல்லாமே, நம்மோட வந்து உக்காந்து தியேட்டரில் சினிமா பாக்கிறாரேண்ணு நம்மைப் பத்தி உயர்வா