இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தென்னகத்து நன்னகராம் திருச்சி, தம்பி!
- திராவிடத்தின் மையத்தில் திகழும் பேரூர்!
முன்னொருநாள் சோழனது மூதூர் ஈதாம்!
- முட்டவரும் பகையெதையும் வெட்டும் வீரர்
இன்னமுந்தான் இருக்கின்றார் இங்கே என்றால்,
- என் மீது தவறில்லை; எழுந்து பாராய்!
இந்நகரின் தென்திசையில் பரந்தி ருந்த
- எழிலான திடலெங்கே? இன்று காணோம்!
வள்ளுவரின் பெயராலே நகராம், இங்கே!
- வானம்போல் விரிந்த பெரும் பந்தல் ஒன்று,
வள்ளுவரின் புகழ்போல வளருந் தன்மை,
- வரலாறு காணாத புதுமை யாகும்!
வள்ளுவரின் குறள் போன்ற வடிவம் கொண்டோர்,
- வாயிலிலே நிறுத்தி வைக்க இருசிங் கங்கள்,
வள்ளுவர் நூல் நயம்போல உயர்ந்த தூண்கள்,
- மாடங்கள் அமைக்கின்றார் மரத்தால் செய்து!
அண்மையிலே, அறிவகத்தின் அறையில் கூடி,
- அருமையுடன் பெருங்கலைஞர் ஆய்ந்து கூற,
வண்ணமிகு ஒவியங்கள் வரைந்து வைத்து,
- வாழ்ந்துகெட்டோர் வரலாறு விளக்கு தற்குக்,
கண்கவருங் காட்சியொன்று காட்ட எண்ணிக்
- கண்துயிலா துழைக்கின்றார், அன்புத் தோழர்!
மண்திருத்திப், புதரழித்து, மன்றம் கட்ட
- மகிழ்வுடனே பலதோழர் உழைக்கின் றார்கள்!