பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

அண்ணா—சில நினைவுகள்


கேட்டதும்-“அடடே! செப்டம்பர் ஒன்பது, நான் நம்ம வடிவேலு திருமணத்துக்குப் போக வேண்டுமேமாப்பிள்ளை சும்மாயிருந்தாலும், அவர் தம்பி முல்லை சத்தி கோபக்காரராயிற்றே!” என்று தயங்கினார் அண்ணா. “அய்யா சொல்லிவிட்டார் அண்ணா, உங்களை நான் அழைத்துப் போகலாம் என்று!” -நான்.

“வாயால்தானே சொன்னார்? வேறு நேரமாயிருந் தால் அய்யாவின் வாய்மொழியே எனக்குப் போதும்! ஆனால் இப்போதுள்ள இந்தக் குழப்பமான சூழ்நிலையில் நான் ஒத்துக்க மாட்டேன். நான் உன்னை நம்பாமல் இதைச் சொல்லவில்லை என்பதும் ஒனக்கே தெரியுமய்யா! அய்யாகிட்டேருந்து ஒரு லெட்டர் வாங்கி வந்துவிடு. நான் ரெட்டிப்பு மகிழ்ச்சியோட ஒன் திருமணத்துக்கு வந்துடறேன்”— என்று சொல்லி முடித்த அண்ணாவைப் பார்த்து, சாம்புவும் தலையாட்டி ஆமோதித்தார்.

வேறு வழி? அடுத்த ரயிலுக்கே ஈரோடு திரும்பி, அய்யாவிடம் ஒடிப்போய், விவரத்தைச் சொன்னேன். ஒரு மிகச் சிறிய துண்டுத் தாளில் “கருணானந்தம் திருமணத்துக்கு நீங்கள் போகலாம். ஈ.வெ.ரா” என்று எழுதித் தந்தார் அய்யா. இப்படி இருவரும் என்னைத் தவிக்க விடுகிறார்களே என்று நொந்து கொண்டே, மீண்டும் திருச்சிக்கு ரயிலேறி, அதிகாலை சாம்பு வீடு சென்றேன். எவ்வளவு அலைச்சல்?

அங்கு பெரிய கும்பலொன்று குழுமியிருந்தது! என்ன விசேடம்? அண்ணாவுக்குப் பக்கத்து நாற்காலியில் நான் அதுவரை பார்த்திராத சிலம்புச் செல்வர் ம. பொ. சிவஞானம் அவர்கள்! கடிதத்தை அண்ணாவிடம் கொடுத் தேன். சிரித்துக் கொண்டே, என்னை ம. பொ. சி.யிடம் அறிமுகப் படுத்தினார். “இவர் திருமணத்துக்கு, என்னை அழைக்க வந்திருக்கிறார். நான் ஒரு நிபந்தனை விதிச்சேன். அதைச் செய்து விட்டார்; இப்போது இன்னொரு நிபந்தனை!......"