பக்கம்:அண்ணா நாற்பது.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அண்ணா நாற்பது
தமிழ்த்தாய் வேட்டல்
அண்ணா துரையின் அரும்பிரிவால் வாடிடும்
எண்ணிலா மாந்தர் இடர்துடைக்க-அண்ணாமேல்
பண்ணுறு நாற்பது பாடல் பகர்ந்திடத்
தண்ணருள் செய்தமிழ்த் தாய்.
அவை யடக்கம்
பொன்னார் சங்கப் பொற்புறு நூற்களாம்
இன்னா நாற்பது இனியவை நாற்பதுபோல்
அண்ணா நாற்பது ஆக்கி யுள்ளேன்
அண்ணா வைப்பிரி ஆழ்துய ரதனால்
எத்தனை வழுக்கள் இருக்குமோ
அத்தனை யும்பொறுத் தருள்புரிந் தேற்கவே!
நூல்

1.

அண்ணா அண்ணாவென் றலறியேநூ றாயிரவர்
உண்ணு வதுவறள உரக்கவழும் ஓலமதை
அண்ணா நீசெவிமடுத் தன் புரைகள் தாராயோ
அண்ணா நீகண்திறந் தருள்கனியப் பாராயோ.

2.

மெரினா கடற்கரையின் மெத்தென்ற மணலறைக்குள்
அறிஞர் அண்ணாநீ அறிவுக்கோ யில்கொண்டாய்
ஒருநாள் இருநாளோ ஒவ்வொருநாள் தொறுமங்கே
திருநாள் கொண்டாடத் திரண்டெழுமால் மக்களினம்!