8
வகுப்புவாதம், நாத்தீகம், பொது உடைமைப் புரட்சி, இவை நாடக மூலம் புகுத்தப்படடுவிடும் என்று பயப்படுவது அறியாமை. உண்மையாகவே அந்தப் பயம், மறுமலர்ச்சி இயக்கத்தின் எதிரிகளுக்கு இருக்குமானால், வகுப்பு அநீதிகளும், வகுப்பு பேதங்களும் நிச்சயம் ஒழியும்; கள்ளி காளான் அழியும்; நஷ்டமா அது? மூடத்தனம் முறியடிக்கப்படும்; மூலமா அதனால் முறிந்து போகும்! எல்லோரும் இன்பம் எய்திடும் வழி கிடைக்கும். பொருளாதாரத் துறையில் இது போற்றத்தக்கதுதானே! இந்த விளக்கமும் நெஞ்சு உரமும் கொண்டு, நாடகத் துறையில் உருவாகிக்கொண்டிருக்கும் மறுமலர்ச்சியை ஆதரித்து ஊக்கமளிக்க வேண்டும் ஊராள்பவர்கள். கருத்திலே தெளிவற்றவர்கள் கலக மூட்டுவதுபோல, நாடகத்துறையிலே பூத்துள்ள மறுமலர்ச்சி, ஒழுக்கக் கேட்டை உண்டாக்காது. ஒழுக்கம் என்பது எது என்பதை விளக்கமாக்கிவிட்டு, ஒழுக்கத்தை வளர்த்துச் செல்லும்; நீதி நேர்மையை அழிக்காது; நீதி எது என்று கண்டறிந்து நிலை நாட்டும்!
ஜவஹர் சொன்னார், சென்ற திங்கள், பெங்ளூரில்: வில் அம்பு வைத்துக் கொண்டு பழங் காலத்திலே சண்டை செய்தார்கள் என்பதற்காக இன்று ராணுவத்துக்கு அந்த ஆயுதமா தர முடியும்! அல்லது தான் பழங்காலத்தின்படி, பெங்களுரிலிருந்து டெல்லிக்கு மாட்டு வண்டியிலா பயணம் செய்ய முடியும்! இப்படி யாரும் யோசனை கூறமாட்டார்கள். ஆனால் சமுதாய சம்பந்தமான பிரச்சினைகளிலே நம்மவர் பலருக்கு மாட்டுவண்டிக் கால மனப்பான்மை இன்றும் இருக்கிறது என்று சொன்னார் சோகத்துடன்.
இருபதாம் நூற்றாண்டு வாழ்க்கை வசதிகள் அவ்வளவையும் ஒன்று விடாமல் அனுபவிக்கிறோம். சமுதாய அமைப்பு, விக்கிரமாதித்யன் காலத்ததாக இருப்பது பொருந்துமா ஆட்டுக்குட்டியை ஏற்றிச் செல்லவா ஆகாய விமானம்!!
சமுதாயத்திலே புதிய முறைகள், அதன் அமைப்பிலே புதியதோர் மாற்றம் தேவை. அந்தப் புதிய உருவத்தை உருவாக்கும் உயரிய பணிதான் மறுமலர்ச்சி. அதன் அவசியத்தை மிகப் பெரும்பாலான மக்களுக்கு உணர்த்துவிக்க நாடகமே, நல்ல கருவி. எனவே நாடகத்தில் மறுமலர்ச்சி மிக மிக முக்கியமானது. நாட்டின் விழிப்புக்கு அது நல்லதோர் அளவுகோல். நாளை நாம் எப்படி இருப்போம் என்பதற்கு அதுவே அறிகுறியுமாகும்.
✽
இவ்வரிய சொற்பொழிவைப் புத்தக வடிவாக்க உரிமை தந்த திருச்சி வானொலி நிலையத்தாருக்கு எமது நன்றி.