உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணா பேசுகிறார்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2


அவர் பிறந்தபோது, இங்குத் தேவைப்படும் எந்தச் சாமானுக்கும், வெளிநாட்டின் தயவை நாடி, ஏங்கிக் கிடந்தோம். இன்று வெளிநாடுகள் நமது சரக்குகளைப் பெற நம்முடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்வதற்குத், தமது ராஜ தந்திரத்தை உபயோகிக்கும் அளவு மாறுதலைக் காண்கிறோம்.

அவர் பிறந்தபோது, கோயில்கள் மூடிக்கிடந்தன. தீண்டாதார் என்று தீயோரால் அழைக்கப்பட்டு வந்த தியாகப் பரம்பரையினருக்கு அவர் கண் மூடுமுன், மூடிக்கிடந்த கோயில்கள் எல்லாம் திறந்துவிட்டன.

குடித்துக்கிடப்பது மிகச் சாதாரணம்; சகஜம் என்று யாரும் எண்ணிக்கொண்டிருந்த நாட்கள் அவர் பிறந்த காலம். மதுவிலக்குச் சட்டம் அமுல் நடத்தப்படுவதைக் கண்டான பிறகே அவர் மறைந்தார்.

அவர் பிறந்த காலத்திலே, சூரியனே அஸ்தமிக்க அஞ்சும் படியான அளவுள்ளதாக இருந்தது பிரிட்டிஷ் சாம்ராஜ்யம். அந்தச் சாம்ராஜ்யத்தின் ஆதிக்கப்போக்கு அழிந்ததைக் கண்டான பிறகே, அவர் கண்களை மூடினார்.

அவர் பிறந்த நாட்களிலே, பிரிட்டனிலிருந்து, கவர்னர்களும், மற்ற அதிகாரிகளும் இங்குவந்த வண்ணம் இருந்தனர் ஆள்வதற்கு—அடிமை இந்தியாவை. வெளியே அவர்கள் போகும் காட்சியைப் பார்த்துவிட்ட பிறகே, உத்தமர் உயிர் நீத்தார்.

இவ்வளவையும், அவர் மந்திரக்கோல் கொண்டோ, யாக குண்டத்தருகே நின்றோ சாதிக்கவில்லை—மக்களிடையே வாழ்ந்து, மக்களின் மகத்தான சக்தியைத் திரட்டிக் காட்டிச் சாதித்தார். புதிய வாழ்வு தந்தார். புதிய அந்தஸ்து தந்தார்.

இவ்வளவு தந்தவருக்கு, அந்தத் துரோகி தந்தது மூன்று குண்டுகள். சாக்ரடீசுக்கு விஷம் தந்ததுபோல.

அவர் சாதித்தவைகள் மகத்தானவை. ஆனால் அவர் சாதிக்க எண்ணியிருந்தவை வேறு பல. அவை மேலும் மகத்தானவை.

நாட்டிலே உள்ள மற்றக் கொடுமைகள்; ஜாதிச் சனியன், வறுமை, அறியாமை, ஆகியவற்றை அடியோடு களைந்தெறிந்து விட்டு, உலகினர் கண்டு பின்பற்றத்தக்க முறையிலே, உன்னதமான இலட்சியங்களைக் கொண்ட ஓர் சமுதாயத்தைக் காண