உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணா பேசுகிறார்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4


“அவர்கள் பலசாலிகள்” மக்கள் கூறினர்.

“நாம் பலம் பெற வேண்டும். பெறுவோம்” அவர் உரைத்தார், உறுதியுடன்.

“சிறையிலே தள்ளுவார்களே”—பயத்துடன் கூறினர் மக்கள்.

“தள்ளுவர்—ஆனால் இப்போது உள்ள இடமும் சிறைதான்; இது பெரிய சிறை”—அவர் பதில் சொன்னார் நகைச்சுவையுடன்.

தடியடி, துப்பாக்கி, தூக்குமேடை, அந்தமான் தீவு என்பன போன்ற எத்தனையோ ஆபத்துக்கள் அடுத்தடுத்து வரும்—உரிமைப் போரிலே உள்ள ஆபத்துக்களை அவர் ஒளிக்காமல், குறைக்காமல் கூறினார்.

இவ்வளவையும் நான் பொருட்படுத்தப் போவதில்லை-மரண பயமின்றி இக்காரியத்திலே ஈடுபடத் தீர்மானித்து விட்டேன்—ஆயுத பலத்தை நம்பி அல்ல; மன உறுதியை நம்பி—நாம் நமது பிறப்புரிமைக்காகப் போராடுகிறோம். இது தர்மம் என்ற பலத்தை நம்பிப் போரைத் தொடுக்கிறேன் என்றார்; தொடுத்தார். வயலோரத்திலிருந்து வாட்டமுற்ற உழவன் முதற் கொண்டு, வசீகர வாழ்விலே இருந்துவந்த சீமான் வீட்டுச் செல்லப்பிள்ளை வரையிலே, அவர் முகாமில் வந்து குமிந்தனர்.

வேறு நாடுகளிலே விடுதலைப் போர் தொடுத்தவர்கள் இரகசியமாகவோ, பகிரங்கமாகவோ சொந்தத்திலேயோ, வேறு நாட்டின் துணைகொண்டோ, இராணுவத்தைத் திரட்டுவது; போர்ப் பொருளைக் குவிப்பது; மறைந்திருந்து தாக்குவது; சதிசெய்வது என்ற பல முறைகளைக் கையாண்டனர். தாய்நாட்டின் விடுதலைக்காக இவையாவும். எனவே, சரியா? தவறா? என்ற கேள்விக்கும் இடம் இல்லை என்றனர்.

உலக வரலாற்றிலேயே முதன் முறையாக இந்தத் திட்டம் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டுப், புதியதோர் தத்துவத்தைக் கொண்ட திட்டத்தை, ஆயுதமின்றி, இரகசியமின்றி, வெளிப்படையாகத் தூய்மையுடன் விடுதலைப்போர் நடத்தலானார்; அதிலே வெற்றி கண்டார்.

அந்த வெற்றி வீரனுக்கு—வெறியன் தந்த பரிசு மூன்று குண்டுகள்—அடிமைகளின் விடுதலையைப் பெற்றுத் தந்த ஆபிரகாம் லிங்கன்மீது ஆங்கோர் வெறியன் குண்டு வீசியது போல.