5
இவ்வளவு பெரிய துணைக் கண்டத்துக்கு விடுதலையை வாங்கித் தந்தவர், நாட்டு மக்களின் ஏழ்மைக் கோலத்தைக் கண்டார்—கருத்திலே அக்காட்சி கலந்தது. அவர், அவர்களில் ஒருவராகவே வாழலானார். “எல்லாம் மாயம்; உலகமே இந்திர ஜாலம்,” என்று உபதேசிக்கும் குருமார்கள் தங்கப் பாதக் குறடும், வைரம் இழைத்த குண்டலங்களும் அணிந்துகொண்டிருக்கக் கண்ட மக்கள், முன்பு எவ்வளவு சுகமும் வசதியும் நினைத்தால் பெறுவதற்கு உரிமையும் வாய்ப்பும் பெற்றிருந்தும், ஏழை வாழ்வை நடத்திய உத்தமர் உலவினார். மக்களின் மனம், என்னென்ன எண்ணியிருக்கும்; குண்டலமணிந்த குருமார்களையும், குறுந்தடி பிடித்து உலவிய உத்தமரையும், ஏக காலத்தில் கண்ட போது, “கண்டறியாதன கண்டோம்” என்று களித்தனர். காதகனுக்குக் கண்ணிலேயும் கருத்திலேயும் கடு விஷம்—அவன் காணச் சகிக்கவில்லை இந்தக் காட்சியை—கொன்றான் உத்தமரை—அருளொழுகும் கண்ணுடையவர் என்று மக்கள் கூறக்கேட்டும், ஏசுவைச் சிலுவையில் அறைந்த வஞ்சகர் போல.
அவரைக் கொன்றானே கொடியோன், அப்பொழுது அவர் மனதிலே இருந்து வந்த எண்ணங்கள் யாவை? என்பதை எண்ணும் போதுதான், நாம் எவ்வளவு பெரிய நஷ்டத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறோம் என்பது விளங்குகிறது. கல்லும், கட்டிடையும், காகிதக் குப்பையும் ஏற்றிக் கொண்டு சென்ற கலம் கவிழ்ந்தால் நஷ்டம் என்ன? முத்தும் பவளமும், முழுமதி போன்ற துகிலும், பிறவும் கொண்டு செல்லும் கலம், கடலிலே மூழ்கிவிட்டால், நஷ்டமும் மனக்கஷ்டமும் நெஞ்சை வெந்திடச் செய்யுமல்லவா? அதுபோலக் காந்தியாரைக் கயவன் கொன்ற போது, அவருடைய மனதிலே அருமையான திட்டங்கள், நாட்டுக்கு நலன் தரும் புதிய முறைகள், ஊசலாடிக் கொண்டிருந்தன. அதை எண்ணும் போதுதான் எவ்வளவு பெரிய நஷ்டம் இந்தச் சம்பவம் என்பது விளங்குகிறது.
விடுதலை பெற்றுத் தந்ததோடு வேலை முடிந்தது என்று அவர் முடிவுகட்டவில்லை. நாட்டை மீட்கவேண்டும்—நல்லாட்சி அமைக்கவேண்டும்—மக்களை நல்லவர்களாக்கவேண்டும்—வீரம்—திறம், விவேகம், மூன்றையும் விரும்பினார். மக்களை நல்லவர்களாக்கவேண்டும் என்பதே அவருடைய இறுதி இலட்சியம். நல்ல மனிதர்களால்தான் நல்லாட்சி நடத்தமுடியும். நாட்டுக்கு விடுதலையும் கிடைத்து மக்கள் நல்லவர்களாகாமல், கொலை பாதகர்கள், கொள்ளைக்காரர்கள், ஆதிக்க வெறியர்கள், ஆள் விழுங்கிகள், ஆஷாடபூதிகள், ஆகியோரின் ஆதிக்கம் அழிந்து படாதிருந்-