பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னோர்கள்

5

அங்குள்ள வேளாளர்களை அழைத்துவரச் செய்தார். அவர்களுக்கு வேண்டிய உபசாரங்களைச் செய்து கரும்பைப் பயிர் செய்யும் முறைகளைத் தெரிந்து கொண்டார். சிறந்த கரும்புக் கரணைகளைச் சோழ நாட்டிலிருந்து கொண்டுவரச் செய்து பயிர் செய்தார். அவை நன்றாக வளர்ந்தன. அதுகாறும் காணாத புதுமையாக அதியர் நாட்டில் கருப்பந் தோட்டங்கள் ஓங்கி வளர்ந்தன. இதனை ஓர் அதிசயமாகவே மக்கள் பாராட்டினார்கள். அந்த வேந்தரை, "கரும்பு தந்த காவலர் " என்று போற்றிப் புகழ்ந்தார்கள்.[1]

இந்தக் குலத்தில் தோன்றிய மன்னர்கள் வீரத்திலும் கொடையிலும் சிறந்தவர்களாக வாழ்ந்தார்கள். கொங்கு நாட்டின் பல பகுதிகளைத் தம்முடைய ஆட்சிக்கு உட்படுத்தினார்கள். மேற்குப் பகுதியாகிய மலை நாட்டில் அவர்களுடைய அரசு பரவாவிட்டாலும் கிழக்குப் பகுதியில் அது விரிந்தது.


  1. புறநானூறு,99.