பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
13. வஞ்சமகள் செயல்

ன் படை முற்றுகை இட்டிருந்தும் பட்டினி இன்றி, வாடாமல் வதங்காமல் அதிகமான் உள்ளே இருப்பதைச் சேரமான் நினைத்த போதெல்லாம் வியப்பாக இருந்தது; ஆத்திரமும் வந்தது. ‘கோழை!வீதியில் மாடு ஓடி வருகிறதென்று மடைப் பள்ளிக்குள்ளே ஒரு வீரன் புகுந்தானாம்! அவனைப் போலவே இவனும் இருக்கிறான்’ என்று இழிவாக எண்ணினான்.

நாட்கள் போய்க் கொண்டிருந்தன. வீரர்களுக்குச் சுறுசுறுப்பே இல்லை. இரவு நேரங்களில் தம்மை அறியாமல் கோட்டைக்குள் உணவு செல்லுகிறதோ என்பதை ஆராயப் புறப்பட்டார்கள் சிலர். கையில் தீப்பந்தங்களை ஏந்திக்கொண்டு சுற்றி வந்தார்கள். அது கோட்டைக்குள் இருப்பவர்களுக்குத் தெரிந்தது. சுற்றி வந்தவர்களின்மேல் அம்பை எய்தார்கள். அம்புக்குத் தப்பி ஆராய்ச்சி செய்தும் ஒன்றும் புலனாகவில்லை. கோட்டைக்கு நெடுந்தூரத்துக்கு அப்பால் காட்டினிடையே சுருங்கையின் வழி ஒன்று இருக்கிறதென்பதை அவர்கள் எப்படி அறிவார்கள்? திரும்பத் திரும்பக் கோட்டை வாயிலைக் கவனித்தார்கள். சில இடங்களில் உள்ள திட்டிவாசலைக் கூர்ந்து நோக்கினார்கள். மேலிருந்து கயிற்றின் வழியாகவோ நூலேணியின் வழியாகவோ யாரேனும் இறங்கி வரக்கூடுமோ என்றும் ஆராய்ந்து பார்த்தார்கள். எத்தனை விதமாகத் துருவிப் பார்த்தும் அவர்களுக்கு எந்தத் துப்பும் கிடைக்கவில்லை.

மறுபடியும் சேரன் அந்தரங்க அவையைக் கூட்டினான். “அதிகமானை நாம் வெல்ல முடியாதுபோல்