பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

அதிகமான் நெடுமான் அஞ்சி

மையைச் சொல். யார் உன்னை அனுப்பினார்கள்?” என்று உலுக்கிக் கேட்டார்கள்.

அவள் அஞ்சவில்லை; நடுங்கவில்லை; “உங்கள் அரசரைப் பார்க்க வந்திருக்கிறேன்” என்றாள்.

“அரசரை அவ்வளவு எளிதில் பார்க்க முடியுமா? நீ யார்? எதற்காக அவரைப் பார்க்க வேண்டும்?”

“அவரிடம் தனியே பேசவேண்டும்.”

வீரர்கள் சிரித்தார்கள். “உன்னைப் பார்த்தால் இள மங்கையாகத் தோன்றுகிறாய். நீ தனியே அரசரைச் சந்திக்கவேண்டுமென்று வந்திருக்கிறாயே: உனக்கு அச்சம் உண்டாகவில்லையா? நாணம் சிறிதும் எழவில்லையா?”

“உங்களுக்குப் பயன்படும் செய்தியைச் சொல்ல வந்திருக்கிறேன். ஆதலால் நான் அஞ்சவேண்டியதில்லை. சேர நாட்டு வீரர்கள் பிறபெண்களை உடன் பிறந்தவர்களாக நினைப்பவர்கள் என்று கேள்வியுற்றிருக்கிறேன்; அதனால் நாணம் அடையவும் அவசியம் இல்லை. நல்லதைச் செய்ய முனைந்தால் சிறிதளவு துணிவு வேண்டியதுதானே?” என்று அந்தப் பெண் கூறினாள்.

“நன்றாகப் பேசுகிறாயே! உன்னுடைய மனத்துணிவைப் பாராட்டத்தான் வேண்டும். நீ சொல்ல வேண்டியதை எங்களிடம் சொல்; நாங்கள் அரசரிடம் அறிவிக்கிறோம்.”

“அப்படிச் சொல்கிற செய்தி அன்று அது; மிக மிக இரகசியமானது.”

வீரர்கள் அவளைப் பிட்டங் கொற்றனிடம் அழைத்துச் சென்றார்கள். “இவள் யார்? எங்கே அழைத்து வந்தீர்கள்?” என்று அவன் கேட்டான்.

“நான் சேர அரசரைப் பார்க்க வந்திருக்கிறேன். நீங்கள் அவரிடம் அழைத்துச் செல்ல முடியுமா?” என்று அவளே பேசினாள்.