பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வஞ்ச மகள் செயல்

103

அரசனும் ஓர் அரசனா? அவன் இருப்பதை விட அழிந்தொழியட்டும் என்று தோன்றியது. ஏழையாகிய என்னால் என்ன செய்யமுடியும்? கடவுளே என் பங்கில் இருந்து தங்கள் படைகளை இங்கே அனுப்பியிருக்கிறார்.”

சேரமான் சற்றே சிந்தனையில் ஆழ்ந்தான். “என் நண்பரும் பெரிய வீரருமாகிய காரி வெளியே நிற்கிறார், அவரையும் உள்ளே அழைத்து யோசனை செய்ய வேண்டும். அதில் உனக்குத் தடை ஒன்றும் இல்லையே?” என்றான்.

“இந்த இரகசியத்தைத் தெரிவிக்கத்தான் வந்தேன். இங்திருந்து நெடுந்துரத்தில் ஒரு காட்டுக்குள் சுரங்க வழியின் வாசல் இருக்கிறது. நான் அதைத் தங்களுக்குக் காட்டச் சித்தமாக இருக்கிறேன். அதன் வழியே உள்ளே செல்லலாம். தாங்கள் யாருக்குச் சொன்னாலும் சரி; இரகசியத்தை எப்படி வைத்துக் கொள்ளவேண்டும்என்பது தங்களுக்குத்தெரியாதா?”

மணியை அடித்துக் காவலனை அழைத்தான் அரசன்; காரியை அழைத்து வரச் சொன்னான். வந்த அவனிடம் எல்லாவற்றையும் சொன்னான். “இந்தப் பெண்ணால் ஓர் அரிய நன்மை நமக்கு உண்டாகப் போகிறது என்று அப்போதே நான் உய்த்துணர்ந்தேன்” என்றான் காரி.

அந்தப் பெண் இன்னாளென்று தெரிவிக்கவும் வேண்டுமா? அந்தப்புரத்தில் ஆடை வெளுத்து வந்த பெண்தான். இப்போது வஞ்ச மகளாக மா விட்டாள்.

காரியும் சேரனும் கூடிப் பேசினார்கள். அன்று இரவில் அந்தக் காட்டுக்குச் சென்று சுருங்கையின் வாசலைப் பார்த்தறிவது என்று திட்டமிட்டார்கள். சில வீரர்களை அழைத்துக்கொண்டு, காரியும் மன்னனும் புறப்பட்டார்கள். வஞ்சப்பெண்ணும் உடன் சென்றாள்.