பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

அதிகமான் நெடுமான் அஞ்சி


காட்டுக்குள் சென்று மறைந்து நின்றார்கள். நள்ளிரவில் சிலர் தீப்பந்தங்களுடனும் தலையில் மூட்டைகளுடனும் அங்கே வந்து கீழே இறங்குவதைக் கண்டார்கள். உடனே வீரர்கள் அவர்களைப் போய்ப்பற்றிக் கொண்டார்கள். அவர்களைச் சிறைப்படுத்தினார்கள். காவலர் சிலரை அங்கே நிறுத்திவிட்டுப் பாசறைக்கு வந்தார்கள். அதிகமானை வென்றுவிட்டது போன்ற மகிழ்ச்சிப்பெருக்கில் ஆழ்ந்தான் பெருஞ்சேரல் இரும்பொறை. அந்தப் பெண்ணுக்குச் சில பரிசிலை அளித்து அவளை வீட்டுக்குக் காவலுடன் அனுப்பினான். தான் அறிந்த இரகசியத்தை எப்படிப் பயன்படுத்துவது என்ற ஆராய்ச்சியில் அவன் இப்போது இறங்கினான்; காரியையும் உசாவினான்.

“நம்முடைய படைகளை அந்தச் சுருங்கையின் வழியே அழைத்துக் கோட்டைக்குள்ளே போய்ப் போர் செய்யலாமா?” என்று கேட்டான் அரசன். “ சுருங்கை சுருங்கியதாகவே இருக்குமென்று நினைக்கிறேன். அதில் ஒரே சமயத்தில் இரண்டு மூன்று பேருக்குமேல் போக முடியாது. படை போவதற்காக அமைத்தது அல்லவே அது?”

“பின் அதை நாம் எப்படிப் பயன்படுத்திக் கொள்வது?”

“நமக்கு அதனால் ஒரு பயனும் இல்லை. அதைப் பயன்படுத்திக் கொள்ளாமல் விடுவதே நல்லது.”

சேரமானுக்கு அந்த விடை இனிக்கவில்லை. “நமக்குக் கிடைக்காத இரகசியம் கிடைத்திருக்கிறது. அந்த வழியை நாம் கண்ணாலே பார்த்தோம். அதை வீணாகப் போகச் செய்வதா? நீர் சொல்வது விளையாட்டாக இருக்கிறதே!” என்றான்.

“நான் வினையைத்தான் சொல்கிறேன். அந்தச் சுருங்கையை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டாம்