பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

போர் மூளுதல்

111

சுட்டி யதுவும் களிறே; ஒட்டிய
தானை முழுதுடன் விடுத்து, நம்
யானை காமின்; அவன் பிறிது எறி பலனே.[1]

[கட்டி அன்ன-சேர்த்துக் கட்டியமைத்தாற் போன்ற, காரி: மலையமானுடைய குதிரையின் பெயர். தொட்டது-அணிந்தது. சுட்டியதுவும்-இலக்காகக் குறித்ததும். தானை - சேனை. காமின் - காவல் செய்யுங்கள்.]

மீன் குத்திக் குருவி தண்ணீரின் மேலே பறந்து மீனை எவ்வாறு கொத்தலாம் என்று படபடப்புடன் இருப்பதுபோல, மலையமான் அந்தக் களிற்றை வேலால் எறியும் துடிப்புடன் செவ்வியை நோக்கி இருந்தான். காரிக் குதிரையின் உடம்பில் சில சிறு புள்ளிகள் அழகாக இருந்தன. அவனுடைய வேலைக் கண்டால் மறவர் நடுங்குவர். அதை நினைத்தாலே நடுங்குபவர்களும் இருந்தார்கள்.

புள்ளிக் காரி மேலோன்; தெள்ளிதின்
உள்ளினும் பனிக்கும் ஒருவே லோனே;
குண்டுநீர்க் கிடங்கிற் கெண்டை பார்க்கும்
மணிநிறச் சிறுசிரல் போலநம்
அணிநல் யானைக்கு ஊறுஅளக் கும்மே.[2]

[காரி: மலையமான் குதிரை. உள்ளினும் பணிக்கும்.நினைத்தாலும் நடுங்குவதற்குக் காரணமான. குண்டு நீர்க் கிடங்கில் . ஆழமான நீரையுடைய அகழியில். மணி நிறம் - நீலமணியின் நிறத்தையுடைய. சிரல் - மீன் குத்திக் குருவி. ஊறு அளக்குமே . துன்பம் உண்டாக்கும் வழியை ஆராய்வான்.]

காரியே முன்வந்து போர்க்களத்தில் நிற்கிறான் என்பதை அறிந்து அதிகமான் தன்படையின் முன்னனிக்கு வந்து நின்றான். அவன் முகத்திலும் மார்பிலும் அம்புகளைச் சொரிந்தனர் பகைவர்கள். காரி வேலை அவன் மார்பிலே வீசி எறிந்தான். கவசம்


  1. புறத்திரட்டு, 1372.
  2. புறத். 1376.