பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

அதிகமான் நெடுமான் அஞ்சி

இருந்ததனால் அது ஆழமாகப் பதியவில்லை. ஆயினும் அதிகமான் புண்பட்டான். மார்பிலே பட்ட புண்ணை விழுப்புண் என்று சொல்வார்கள். அதை வீரர் வரவேற்பர்.

புண்பட்ட அதிகமான் கோட்டைக்குள் சென்றான். பஞ்சும் நெய்யும் கொண்டு புண்ணுக்கு மருந்திட்டனர். இரண்டு நாட்கள் அதிகமான் போர் முனைக்குப் போகவில்லை. “இன்று நம்முடைய அரசர் புண்படாமல் இருந்தால் காரி தொலைந்திருப்பான்” என்று ஒரு வீரன் கூறினான். ஔவையார் அங்கே இருந்தார். அவர் காதில் அது விழுந்தது. அவர் அதிகமானுடன் உரையாடிக் கொண்டிருந்தார். வீரன் கூறிய செய்தி அவர் உள்ளத்தே தேங்கியது. “ஆம், காரி ஒருவன் தானா? இன்னும் எத்தனை பேரோ வீழ்ந்திருப்பார்கள். இவன் விழுப்புண் பட்டதனால் உயிர் பிழைத்தவர்கள் பலர் என்றே சொல்ல வேண்டும்”[1] என்றார்.

அதிகமான் விழுப்புண் பட்டுக் கிடந்தான் என்ற செய்தியைக் கோட்டையில் இருந்தவர்கள் அறிந்து வருந்தினார்கள். இளையவர்களும் முதியவர்களும் மகளிரும் அவனைக் காண வேண்டும், காண வேண்டும் என்று துடித்தனர். அவன் பாதுகாப்பான இடத்தில் இருந்தான். அவன் இருந்த இடம் யாருக்கும் தெரியவில்லை. சான்றோர் பலர் அவனை நாடி வந்தனர். ஆனால் அவர்களையும் காவல் காப்பவர்கள் விடவில்லை. “அவன், எல்லோரும் மகிழும்படி இன்னும் சில நாளில் பழையபடி வெளிப்படுவான்” என்று சொன்னர்கள், உடன் இருந்தவர்கள். இந்த நிகழ்ச்சியைத் தகடூர் யாத்திரையில் ஒரு பாடல் சொல்கிறது. அதிகமானைப் பார்க்க வந்த சான்றோரைப் பார்த்து, அவனுடன் இருந்து பாதுகாத்தவர்கள் சொன்னது போல அமைந்தது அந்தச் செய்யுள்.


  1. புறநானூறு, 93,