பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அதிகமானும் ஔவையாரும்

7


மிக்க வலிமையை உடையதாக்கினான். புதிய புதிய ஊர்களைத் தன் செங்கோலாட்சிக்குள் கொண்டுவந்தான். சிறிய சிறிய நாடுகளை வைத்துக்கொண்டு வாழ்ந்திருந்த குறுநில மன்னர்கள் கொங்கு நாட்டிலும் அதற்கு அருகிலும் இருந்தார்கள். அவர்களிற் பலர் கொடுங் கோலர்களாக இருந்தார்கள். அவர்களால் மக்களுக்கு விளைந்த தீங்கை உணர்ந்த அதிகமான் அத்தகையவர்களைப் போர்செய்து அடக்கினான். இப்படி அவன் தன்னுடைய இளமைப் பருவத்தில் ஏழு பேர்களை அடக்கி அவர் ஆண்ட இடங்களைத் தன் ஆட்சிக்கீழ்க் கொண்டுவந்தான். அவனுக்கு முன்பும் அவன் முன்னோர்கள் ஏழு பேர்களை வென்றதுண்டு. அவர்கள் ஏந்தியிருந்த ஏழு கொடிகளையும் தம் கொடிகளாகப் பிடித்துத் தாம் பெற்ற வெற்றியைக் கொண்டாடினார்கள். அதிகமான் இப்போது தன் வலிமையினால் வேறு ஏழு பேர்களை வென்றான்.[1]

இளமையில் அரசாட்சியை மேற்கொண்டதனால் அவனுக்கு ஊக்கமும் தன் நாட்டை விரிவாக்கவேண்டும் என்னும் ஆர்வமும் இருந்தன. அதனால் ஒவ்வொரு குறுநில மன்னனாக அடக்கி வந்தான். அந்தக் காலங்களில் எப்போதும் போரைப் பற்றியே சிந்தனை செய்து வந்தான். அவனுடைய வீரத்தை மக்கள் பாராட்டினார்கள். புலவர்கள் அவனைப் பார்க்க வந்தார்கள். அவர்களிடம் பெருமதிப்பு வைத்துப் பழகினான். அதிகமான் போர் சம்பந்தமாகத் தன்னுடைய படைத் தலைவர்களுடன் சூழ்ச்சியில் ஈடுபட்டிருந்தால் அவனைப் பார்ப்பது அரிது. ஒருமை மனத்தோடு மேலே செய்ய வேண்டிய வினைவகைகளைப்பற்றி ஆராய்ந்து கொண்டிருப்பான்.

அவனுடைய வீரச் சிறப்பும், புலவர்களை ஆதரித்துப் பரிசில் தரும் கொடைப் புகழும் தமிழ் நாட்டில்