பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

அதிகமான் நெடுமான் அஞ்சி

வந்தாலும் பழையபடி போர் செய்ய இயலாது. ஓட்டைப் படகு ஆற்றைக் கடக்குமா?” என்று சொல்லி எழச் செய்தான்.

போர் இப்போது முழு வீறுடன் தொடர்ந்தது. அதிகமானும் புதிய ஊக்கத்தோடு புறப்பட்டான். இருபெரும் படைகள் தனக்குத் துணையாக வந்த பிறகு என்ன குறை? “இதோ இரண்டு மூன்று நாட்களில் சேரர் படையை முதுகிட்டு ஓடச் செய்கிறேன்” என்று கனன்று எழுந்தான். சிங்கக்குட்டி சோம்பு முரித்து எழுந்ததுபோல அவன் மீண்டும் போர்க்களத்தில் வந்து குதித்தான். துணைப் படையின் வரவும் அதிகமான் தோற்றமும் அவனுடைய படை வீரர்களுடைய தளர்வை இருந்த இடம் தெரியாமல் ஓட்டிவிட்டன. பழைபடி வீறு கொண்டு எழுந்தனர். அன்றைப் போரில் எதிர்க் கட்சியில் ஒரு தலைவன் மண்ணைக் கவ்வினான்.

அந்தச் செய்தி காரியின் உள்ளத்திலே வேதனையை உண்டாக்கியது. சுளீர் என்று சாட்டை கொண்டு அடித்தால் குதிரைக்கு வலிக்கத்தான் வலிக்கும். அப்படித்தான் அவன் உள்ளத்தில் வலித்தது. ஆனால் அந்த அடியைப் பெற்ற குதிரை நாலு கால் பாய்ச்சலிலே பாயத் தொடங்கும். காரியும் அப்படியே பாயத் தீர்மானித்தான். அன்று இரவு சேரமான் முன்னிலையில் படைத் தலைவர்களையெல்லாம் கூட்டி இன்ன இன்னபடி போர் செய்ய வேண்டும் என்று வரையறை செய்தான். “இன்னும் இரண்டு மூன்று நாட்களில் இந்தப் போருக்கு ஒரு முடிவு காணவேண்டும். சோழ பாண்டியர்களின் படையைக் கண்டு அஞ்ச வேண்டியது இல்லை. வெறும் எண்ணிக்கையினால் வீரம் விளங்காது. ஆயிரம் எலிகள் வந்தாலும் ஒரு நாகத்தின் மூச்சுக்கு முன்னே நிற்க இயலாது. போர் நீண்டுகொண்டு போனால் இன்னும் யாராவது