பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

அதிகமான் நெடுமான் அஞ்சி


மெல்ல மெல்லப் பரவின, நாளடைவில் பல புலவர்கள் அவனிடம் வந்து பாடிச் சென்றனர்.

தமிழ் நாட்டுப் புலவருக்குள் பெண்பாலார் பலர் உண்டு. அவர்களில் மிக்க சிறப்பைப் பெற்றவர் ஔவையார். அவர் நல்லவர்கள் எங்கே இருந்தாலும் சென்று கண்டு நட்புரிமை பூண்டு பாராட்டும் பண்பாளர். அவர்களுக்கு வேண்டிய நல்லுரை கூறி மேலும் நற் செயல்களைச் செய்யச் செய்யும் இயல்புடையவர்.

அவர் காதில் அதிகமானுடைய புகழ் விழுந்தது. இளையவனாக இருந்தாலும் பெருந்தன்மையும் கொடையும் வீரமும் உடையவன் என்று புலவர்கள் பாராட்டுவதை அவர் கேட்டார். அப்படியானால் நாமும் அவனைப் போய்ப் பார்த்துவரலாம் என்று புறப்பட்டார். பல நாள் நடந்து தகடூரை அடைந்தார். அப்போது அதிகமான் யாரோ சிற்றரசன்மீது படையெடுத்துப் போர் செய்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தான் ; அமைச்சரோடும் படைத் தலைவரோடும் தனியே இருந்து ஆலோசனை செய்துகொண்டிருந்தான். அந்தச் சமயத்தில் ஔவையார் அங்கே போய்ச் சேர்ந்தார்.

அப் பெருமாட்டியைக் கண்ட அரண்மனை அதிகாரி ஒருவர் அவரை வரவேற்று அமரச் செய்தார்; நன்னீர் அளித்து அருந்தச் சொன்னார் : “தாங்கள் யார்?” என்று கேட்டார்.

“நான் ஔவை யென்னும் பெயரை உடையவள்” என்று விடை வந்தது.

அதிகாரி அதைக் கேட்டவுடன் திடுக்கிட்டார். ஒளவையாரின் பெருமையைக் கேள்வி வாயிலாக நன்றாக உணர்ந்தவர் அவர். அந்தப் புலமை செறிந்த பிராட்டியின் பெருமையைத் தமிழுலகம் முழுவதுமே நன்கு அறிந்து கொண்டிருந்தது; அப்படியிருக்க அதிகமான் அரண்மனை அதிகாரி தெரிந்து கொண்