பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அதிகமானும் ஔவையாரும்

9

டிருந்ததில் வியப்பு ஒன்றும் இல்லை. அவர் கையைக் குவித்து ஔவையாரைத் தொழுதார்; “ஏதேனும் சிறிது உணவு கொள்ளலாமா?” என்று கேட்டார்.

“அதிகமானைக் காண வேண்டும் என்று வந்தேன். அந்த மன்னனைக் கண்ட பிறகுதான் உணவு முதலியவற்றைக் கவனிக்கவேண்டும்; அவனைக் காண முடியும் அல்லவா ?” என்றார்.

அதிகாரி தர்மசங்கடத்தில் அகப்பட்டுக் கொண்டார். அதிகமான் தனியாக இருந்து ஆலோசனை செய்யும்போது யாரும் அங்கே செல்லக்கூடாது. எந்த வேலையானாலும் அவனுடைய ஆலோசனை முடிந்த பிறகே சொல்ல வேண்டும். ஆனால் இப்போது வந்திருப்பவரோ, புலவர் உலகம் போற்றும் பொற்புடைய அம்மையார். அவருடைய வருகையை மன்னனுக்கு உரையாமல் இருந்தால் அவரை அவமதித்ததாகும். இத்தகைய சிக்கலான நிலையில் அகப்பட்டுத் திண்டாடினார் அதிகாரி. “இதோ மன்னர் வந்துவிடுவார்; சற்றே பொறுத்திருங்கள்” என்று சொன்னார். “புறத்தே சென்றிருக்கிறார்” என்று எளிதிலே சொல்லிவிடலாம். ஆனால் பேரறிவுடைய அந்த மூதாட்டியிடம் பொய் சொல்லும் துணிவு அதிகாரிக்கு உண்டாகவில்லை.

சிறிது நேரம் கழிந்தது. அதிகமான் வெளியே வரவில்லை. அதிகாரி புழுவாய்த் துடித்தார். “நான் வந்ததைப் போய்ச் சொல்லவில்லையா?” என்று ஔவையார் கேட்டார். அதிகாரி உள்ளே போய் வந்தார்; “வந்துவிடுவார்” என்று மீட்டும் சொன்னார். அவர் அதிகமானை அணுகவே இல்லை. பின்னும் சிறிது நேரம் பொறுத்துப் பார்த்தார் ஔவையார். அதிகாரியைச் சிறிதே சினக்குறிப்புத் தோன்றப் பார்த்தார். அதற்கு மேல் அவ்வதிகாரியால் அங்கே நிற்க முடியவில்லை; உள்ளே போய்விட்டார்.