பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

அதிகமான் நெடுமான் அஞ்சி


மீட்டும் சிறிது போழ்து காத்திருந்த மூதாட்டி யாருக்குப் பொறுமை சிதைந்தது; சினம் மூண்டது; எழுந்தார். அங்கே வாயிலைக் காத்துநின்ற காவலனைப் பார்த்தார்.

“ஏ வாயில் காவலனே, வாயில் காவலனே !” என்று அழைத்தார். அவன் திரும்பிப் பார்த்தான். “இதோ நான் சொல்வதை உன்னுடைய மன்னனிடம் போய்ச் சொல்” என்று சொல்லத் தொடங்கினார். “புலவர்கள் கொடையாளிகளைத் தேடிச் சென்று தம்முடைய இன்சொல்லாகிய விதையை அவர்கள் காதில் தூவுவார்கள். தாம் நாடி வந்ததைப் பெற்றுக் கொள்வார்கள். தம்முடைய தரம் அறிந்து, வரிசையை அறிந்து, பரிசளிப்பவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று நாடிச் செல்வார்கள். அத்தகைய பரிசிலருக்கு அடைக்காமல் திறந்திருக்கும் வாயிலைக் காக்கும் காவலனே!”

வாயில் காவலனுக்கு வியப்புத் தாங்கவில்லை. ‘இவர் நம்மைப் பார்த்தல்லவா பாடுகிறார்?’ என்று மகிழ்ச்சியும் உண்டாயிற்று.

“வேகமான குதிரையை நடத்தும் தலைவனாகிய அதிகமான் நெடுமான் அஞ்சி தன் பெருமையைச் சரி வர உணர்ந்து கொள்ளவில்லை போலிருக்கிறது. தன்னைத் தேடி வந்த புலவர்களை மதிப்பாக உபசரித்துப் பரிசில் வழங்குகிறவன் என்ற பெயரை அவன் பெற்றிருக்கிறான். அதைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்பதை அவன் மறந்து விட்டானோ ?”

“நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று வாயில் காவலன் ஒன்றும் தெரியாத நிலையில் கேட்டான்.

“அவன் என்னைக்கூட அறிந்து கொள்ளவில்லை போலும்! வறுமையால் வாடிப் பிச்சை கேட்க வந்தவள் என்று நினைத்தானோ?”