பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அதிகமானும் ஒளவையாரும்

11


சிறிது நேரம் புலமைப் பிராட்டியார் சிந்தித்தார்; மறுபடியும் தொடர்ந்து பேசினார். “அறிவுடையோரும் புகழுடையோரும் ஒரு காலத்தில் தோன்றி மறைந்து போய் விடுகிறார்கள் என்பது இல்லை. உலகம் சூனியமாகப் போய் விடவில்லை. ஆதலால் இந்த இடத்தை விட்டால் எத்தனையோ இடங்கள் இருக்கின்றன. வளர்ந்து செறிந்த மரங்களையுடைய காட்டிலே கோடரியைக் கொண்டு புகும் தச்சனுக்கு மரத்துக்கா பஞ்சம்? உலகம் அதுபோன்றது. எந்தத் திசையிலே சென்றாலும் அங்கே எங்களுக்குச் சோறு கிடைக்கும்.”

இந்தக் கருத்தை அமைத்து ஒரு பாடலை அவர் சொல்லி வாய் மூடினர்; அதிகமான் விரைவாக வந்து அங்கே நின்றான்; “வரவேண்டும்; வரவேண்டும். வந்து நெடுநேரம் ஆயிற்றுப் போலும்! இந்தப் பிழையைப் பொறுத்தருள வேண்டும். ஏதோ பாடலைப் பாடியது காதில் விழுந்ததே!” என்றான்.

“ஆமாம் ; என் உள்ளத்திலே தோன்றியதைப் பாடினேன்; கேள்” என்று பாட்டைச் சொன்னார்.[1]

அதைக் கேட்டு அதிகமான் நடுங்கினான். “இனி நடத்த இருக்கும் ஒரு போர் சம்பந்தமான யோசனையில் ஈடுபட்டிருந்தேன். நீங்கள் வந்திருப்பது தெரியாது. தெரிந்திருந்தால் முன்பே வந்து பார்த்திருப்பேன். இப்போதுதான் செய்தி தெரிந்து ஓடி வந்தேன். என் பிழையைப் பொறுத்தருள வேண்டும்” என்று மிகவும் பணிவாகக் கூறினான். அதைக் கேட்ட மூதாட்டியாருக்கு உள்ளம் நெகிழ்ந்தது. அவன்மேல் பிழை இல்லைஎன்பதை நன்கு உணர்ந்து சினம் ஆறினார்.

அதிகமான் அவரை உள்ளே அழைத்துச் சென்றான். தக்க இருக்கையில் அமரச் செய்தான். உண்ணச் செய்தான். பின்பு மிகவும் அன்போடு பேசிக்