பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3. வீரமும் ஈகையும்


அதிகமான் விரும்பியபடியே ஔவையார் பின்னும் ஒரு முறை தகடூருக்கு வந்தார். அப்போது அதிகமான் ஏழு குறுநில மன்னர்களையும் வென்ற பெருமிதத்தோடு இருந்தான். ஔவையாரை மிகச் சிறப்பாக வரவேற்று உபசாரம் செய்தான். நெடுநேரம் அவரோடு பேசிப் பொழுது போக்கினான். தான் செய்த போர்களைப்பற்றியும் அப்போது பெற்ற அநுபவங்களையும் எடுத்துச் சொன்னான். ஔவையார் அவற்றைக் கேட்டு அவன் வீரத்தைப் பாராட்டினார். பல பாடல்களைப் பாடினார். ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் பாடியதைப்போல அமைத்தார். அவற்றைப் படித்தால், போர்க்களத்தில் அதிகமானுடன் இருந்து அவனுடைய வீரச் செயல்களைக் கண்டு கண்டு அவ்வப்போது பாடியவைபோலத் தோன்றும்.

பகைவர்களைப் பார்த்துச் சொல்வது போல அமைந்தது ஒரு பாட்டு.

“பகையரசர்களே, போர்க்களத்திலே புகவேண்டாம். புகுந்தால் நீங்கள் தொலைந்து போவீர்கள். எங்களிடம் ஒரு வீரன் இருக்கிறான். அவனுடைய வலிமையை எப்படி அளந்து காட்டுவது ? மிகவும் கைவன்மையையுடைய தச்சன் ஒரு நாளைக்குச்சிறந்த தேர்கள் எட்டைச் செய்யும் ஆற்றலையுடையவனாக இருக்கிறான். அத்தகையவன் ஒரு மாதம் முயன்று ஒரு தேர்ச் சக்கரத்தைச் செய்தால் அது எவ்வளவு வலிவுடையதாக இருக்கும் ? அத்தகைய பெரு வலிமையை உடையவன் எங்கள் அதிகமான்” என்ற பொருளைக் கோண்டது அந்தப் பாட்டு. அதிக-2