பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வீரமும் ஈகையும்

17

அணுக முடியாமல் இருந்தது. ஔவையாரைக் காக்க வைத்து அதனால் அவர் சினம் கொள்ளும்படி நேர்ந்ததல்லவா ? அது முதல் புலவர்கள் வந்தால் மட்டும் இன்னார் வந்திருக்கிறார் என்று தெரிவிக்கும்படி சொல்லியிருந்தான் அதிகமான்.

ஆதலின் பெருஞ்சித்திரனாரை வழக்கம்போல எதிர்கொண்டு அழைத்து இருக்கச் செய்த அதிகாரி, அதிகமானிடம் சென்று அவர் வரவைத் தெரிவித்தார். அந்தப் புலவரை முன்பு அதிகமான் கண்டதில்லை; அவரைப்பற்றிக் கேட்டதும் இல்லை. அப்போது அவன் ஈடுபட்டிருந்தது மிகவும் முக்கியமான வேலை; ஆதலால் அதை விட்டுவிட்டுச் செல்ல மனம் வரவில்லை. புலவரைக் காத்திருக்கும்படி சொல்வதும் முறையென்று தோன்றவில்லை. ஆகையால் அவருக்குச் சில பரிசில்களைக் கொடுத்து அனுப்பும்படி அதிகாரியிடம் சொன்னான். அப்படியே அவர் ஒரு தட்டில் பழம், வெற்றிலை பாக்கு வைத்துப் பொன்னும் உடன் வைத்துப் புலவரை அணுகி அவர்முன் வைத்தார்; “மன்னர் பெருமான் மிகவும் இன்றியமையாத ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்; தங்கள் வரவைக் கேட்டு மகிழ்ந்து இவற்றைச் சேர்ப்பிக்கச் சொன்னார்; ஆறுதலாக மீட்டும் ஒருமுறை வரும்படி சொன்னார்.” என்றார்.

புலவர் பரிசில்கள் வைத்திருந்த தட்டைப் பார்த்தார்; அதிகாரியை ஏற இறங்க நோக்கினார். சிறிது நேரம் சும்மா இருந்தார்: கனத்துக்கொண்டார். அவரைப் பார்த்துச் சொல்லத் தொடங்கினார்.

“உம்முடைய மன்னன் இதைக் கொடுத்து அனுப்பும்படி சொன்னானா? அவனுடைய புகழைக் கேட்டு அவனைக் கண்டு இன்புறவேண்டுமென்று நெடுந்தூரத்திலிருந்து நான் வருகிறேன். சிறிய குன்றுகளையும் பெரிய மலைகளையும் கடந்து வந்திருக்கிறேன். நான்