பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

அதிகமான் நெடுமான் அஞ்சி


“அது மன்னர்களின் கடமை.”

“எது கடமை? புலவர்களைப் புறக்கணிப்பதா? போருக்கு ஆயத்தம் செய்வதா?”

“வீரத்தை வெளியிடுவது மன்னர்களின் புகழை வளர்க்கும் செயல் அல்லவா ?”

“அதற்காக எத்தனை காலம் வீணாகிறது?அவர்கள் போர் செய்வதனால் புகழ் வளர்வதில்லை. உங்களைப் போன்ற புலவர்கள் வாழ்த்திப் பாராட்டுவதனால் தான் புகழ் வளர்கிறது. புலவர்கள் தம்முடைய அரிய கவிகளால் பிறரை வாழவைக்கிறார்கள்; தாங்களும் வாழ்கிறார்கள். அறிவின் பிழம்பாக விளங்கும் நீங்கள் இந்தக் கனியை உண்டதுதான் முறை. நீங்கள் வாழ, உலகம் வாழும். இறைவன் நானும் உண்ணவேண்டும் என்று திருவுள்ளம் கொண்டானானால் மரம் இருக்கிறது; கனி இன்னும் விளையலாம்.”

“இத்தகைய கொடையாளியை நான் எங்கும் கண்டதில்லை. நீ நீடூழி வாழவேண்டும். சாவைத் தரும் நஞ்சை உண்டும் சாவாமல் யாவருக்கும் அருள் செய்து விளங்கும் நீலகண்டப் பெருமானைப் போலப் பல்லாண்டு பல்லாண்டு வாழவேண்டும்!” என்று மனம் உருகி வாழ்த்தினார் ஔவையார். உணர்ச்சிமிக்க நிலையில் அந்தப் பெருமாட்டியார் தம் கருத்தை அமைத்து ஓர் அரிய பாடலைப் பாடினார்.

“வெற்றியை உண்டாக்கி வெட்ட வேண்டியதைத் தப்பாமல் வெட்டும் வாளை எடுத்துப் பகைவர்களைப் போர்க்களத்திலே அழியும்படி வென்றவனே, கழலுகின்ற வீர வளையைப் பெரிய கையிலே அணிந்தவனே, எப்போதும் ஆரவாரத்தோடு இனிய குடிநீர்களைப் பிறருடன் உண்டு மகிழும் அதியர் கோமானே,போரில் வஞ்சியாமல் எதிர் நின்று கொல்லும் வீரத் திருவையும் பொன்னாலான மாலையையும் உடைய அஞ்சியே, பால் போன்ற பிறையை மேலே அணிந்த முன்தலையையும் நீல மணிபோன்ற திருக்கழுத்தையும் உடைய