பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படர்ந்த புகழ்

33


“அவன் வெற்றிப் பெருமிதத்தோடு இருக்கும் போது என்னைக் கவனிப்பானா?”

“இப்போதுதான் நன்றாகக் கவனிப்பான். இப்போது என்ன? உலகமெல்லாம் பஞ்சம் வந்துவிட்டாலும் அவன் தன்னை அடைந்தாரைப் பாதுகாப்பான். உன் பாத்திரமாகிய மண்டையை நிமிர்க்க வழியில்லை என்றல்லவா வருந்துகிறாய்? அங்கே போனால் அதைக் கவிழ்க்கவே முடியாது. பலவகை உணவுகளைக் கொடுத்துப் பாத்திரத்தில் அடை அடையாக உணவு ஈரத்துடன் படியும்படி செய்வான்.”

“அப்படியா! அப்படியும் ஒருவன் இருக்கிறானா”

“இருக்கிறான் அம்மா, இருக்கிறான். உடனேபோ, அவன் கொடையை அறிவாய். அவன் வாழட்டும்! அவன் முயற்சி ஓங்கட்டும்!” என்று வந்த புதியவள் வாழ்த்தினாள்.

இப்படி அதிகமானுடைய பகையை ஒழிக்கும் வீரத்தையும், உலகில் வறிய பஞ்சம் வந்தாலும் தன்பால் வந்தவர்களைப் போற்றிக் காக்கும் பண்பையும் ஓர் அழகிய கதையாக, இனிய காட்சியாக, கற்பனை செய்து காட்டினார் ஔவையார்[1].

வேறு ஒரு கற்பனைக் காட்சியிலும் அதிகமானுடைய ஈகையையும் வீரத்தையும் இணைத்தார் அப்பெருமாட்டியார். அந்தப் பாட்டு, ஒரு தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே நிகழும் காத்ல் நிகழ்ச்சிகளைச் சொல்லும் அகப்பொருள் வகையைச் சேர்ந்தது.

ஓர் ஆடவன் தன் மனைவியை விட்டுச் சில நாள் பிரிந்து பொதுமகள் ஒருத்தியின் தொடர்பு உடையவனாக இருந்தான். அதனால் அவன் மனைவி மிகவும் வாடினாள். அவன் மீண்டும் வந்தான். தன் கணவன் என்ன தீங்கு செய்தாலும் பொறுத்துக்கொண்டு அவ


  1. புறநானூறு, 103.