பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படர்ந்த புகழ்

35

“எப்போதும் நிறுத்தாமல் கொடுக்கும் மழை போன்ற வள்ளன்மையையுடையகையையும்,விரைந்துசெல்லும் ஆண் யானைகளையும், உயர்ந்த தேரையும் உடைய நெடுமான் அஞ்சி, பகைவரை அழிக்கும் போர்க் களத்துக்கருகில் உள்ள ஊர்க்காரர்கள், பல நாள் கவலையோடு விழித்திருந்து சில நாளே தூங்குவார்கள்; அப்படி நீ தூங்கும் நாட்கள் சிலவாகவே அமைக” என்று அதிகமானுடைய ஈகையையும் வீரத்தையும் இணைத்துச் சொல்கிறது அந்தப் பாட்டு.

அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற விளைகனி
குண்டுநீர் இலஞ்சிக் கெண்டை கதூஉம்
தண்டுறை ஊரன் பெண்டினை ஆயின்
பலவா குகதின் நெஞ்சிற் படரே !
ஓவாது ஈயும் மாரி வண்கைக்
கடும்பகட்டு யானை நெடுந்தேர் அஞ்சி
கொல்முனை இரவூர் போலச்
சிலவா குகநீ துஞ்சும் நாளே!

[1].

[அரில்-ஒன்றோடு ஒன்று சிக்கிப் பிணைந்த பிணைப்பு. பவர்- கொடி. வரிப்புறம்- கோட்டையுடைய வெளிப்பக்கம். குண்டு - ஆழம். இலஞ்சி - குளம். கதூஉம் - கவ்வும். பெண்டினை - அடங்கிய மனைவியாக இருப்பவள். படர் - துயரம். மாரி வண்கை - மழைபோன்ற வள்ளன்மையையுடைய கை. கடும் பகட்டு யானை - வேகமாகச் செல்லும் ஆண் யானை. கொல் முனை - பகைவரைக் கொல்லும் போர்க்களம். இரவு ஊர் போல - இரவையுடைய ஊர்க்காரர்களைப்பல. துஞ்சும் - உறங்கும்.]

இவ்வாறு அதிகமான் நெடுமான் அஞ்சியின் பல வகைப் புகழ் ஔவையாரென்னும் புலமைப் பெருஞ்செல்வியாருடைய பாட்டாகிய கொழுகொம்பில் ஏறித் தமிழுலகம் எங்கும் பரவிப் படர்ந்து மலர்ந்தது.


  1. குறுந்தொகை, 91