பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



6. ஔவையார் தூது

க்காலத்தில் காஞ்சிபுரத்தில் தொண்டைமான் இருந்து அரசாண்டு வந்தான். அதிகமானுக்குப் பெரிய மன்னர்களுடன் நட்பை வளர்க்கவேண்டும் என்னும் அவா உண்டாயிற்று. பாண்டியனுக்குச் சில சமயங்களில் அதிகமான் போரில் உதவிபுரிந்தான். அதனால் அவனுடைய நட்புக் கிடைத்தது. ஔவையாரைப் போன்ற தமிழ்ப்புலவர்கள் அடிக்கடி மதுரைக்கும் தகடூருக்கும் மாறி மாறிப் போய்க்கொண்டிருந்தார்கள். அதன் வாயிலாகவும் அந்த நட்பு வலிமை பெற்றது. சோழ மன்னனிடமும் அதிகமான் உறவு பூண்டான். அடிக்கடி தக்க பெரியவர்களைத் தூதாக அனுப்பிச் சோழனுடைய நலங்களை விசாரித்து வரச் செய்வான். சேரர் குலத்தோடு மட்டும் அவனுக்கு நெருக்கம் இல்லாமல் இருந்தது. இன்று நேற்று வந்த பிளவு அன்று இது. மிகப் பழங்கால முதற்கொண்டு சேர மன்னர்களுக்கும் அதிகர் குலத்துக்குமிடையே ஒரு வகையான பகைமை இருந்து கொண்டே வந்தது. அதனால் சேரனுடன் மாத்திரம் அதிகமானுக்கு யாதோர் உறவும் இல்லாமல் இருந்தது.

தொண்டைமானுடைய தலைநகரம் நெடுந்தூரத்தில் இருந்தது; சோழ நாட்டுக்கு வடக்கே பல காவ தங்களுக்கு அப்பால் உள்ளது. அங்கே புலவர்கள் அடிக்கடி போய் வருவதும் இல்லை. மதுரைக்கு அவர்கள் போவதுதான் மிகுதி. இதனால் தொண்டைமானுடைய தொடர்பு அதிகமானுக்கு உண்டாக வாய்ப்பு நேரவில்லை. எப்படியாவது சோழ பாண்டியர்களுடன் நட்புப்பூண்டதுபோலத் தொண்டைமானுடனும் உறவு