பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

அதிகமான் நெடுமான் அஞ்சி

னையோ பெரும் போர்களைச் செய்து வெற்றி கண்டவன். அவனுக்கு முன் நிற்பதென்பது எத்துணைப் பெரிய வீரனாயினும் இயலாத செயல். ஓரியால் எப்படி நிற்கமுடியும்? ஆனால் அவன் சிறிதும் பின் வாங்கவில்லை. தளர்வு தோன்றினாலும் தன் உயிரைப் பிடித்துக்கொண்டு தாக்கினான். என்ன பயன்? கடைசியில் காரியின் வாளுக்கு அவன் இரையானான். காரி வென்றது வியப்பே அன்று. ஓரி ஓடாமல் ஒளியாமல் நேர் நின்று போர் செய்து உயிரை விட்டதைக் கண்டு யாவரும் வியந்தனர். அவனுடைய நாட்டை அடிப் படுத்திய காரி அதைச் சேரமானுக்கு ஈந்தான்.[1] சேரமான் தக்க அதிகாரிகளையும் படைத்தலைவரையும் கொல்லிக் கூற்றத்துக்கு அனுப்பித் தன் ஆட்சியைச் செலுத்தலானான்.

சேரமான் செய்த இந்தச் செயலைச் சான்றோர்கள் போற்றவில்லை. அதிகமானுக்குச் சேரமான்பால் கோபம் மிக்கது. அவனுக்குக் கருவியாக இருந்து ஓரியைக் கொன்ற காரியை உடனே போய்க் கொன்றுவிட்டு வரவேண்டும் என்ற ஆத்திரம் உண்டாயிற்று. ஓரி கொல்லப்பட்டான் என்ற செய்தியைக் கேட்ட அந்தக் கணத்திலேயே அவன் காரியைப் பழிவாங்கவேண்டும் என்ற வஞ்சினத்தைச் செய்தான். ஆறப் போட்டுக் காரியோடு பொருவதைவிட உடனே தன் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும் என்று துடித்தான்.

அதற்கு ஒரு தடை இருந்தது. அவனுடைய மனைவி கருவுற்றிருந்தாள். பல காலம் மகவு இல்லாமல் இருந்த அவளது கலி தீரும் பருவம் வந்தது. அந்தச் சமயத்திலா போர் புரியப் போவது? இதை அதிகமானைச் சேர்ந்த பெரியோர்கள் எடுத்துச் சொன்னர்கள். அவன் அரசியலில் வல்லவன். மாற்றான் வலியை அறிந்து


  1. அகநானூறு, 209.