பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோவலூர்ப் போரும் குமரன் பிறப்பும்

49

வைத்து அவன் சோர்வுற்ற செவ்வி கண்டு தாக்க வேண்டும் என்பதை நன்கு உணர்ந்தவன். கொல்லிக் கூற்றத்தில் நிகழ்ந்த போரில் அவனும் அவன் படையும் ஈடுபட்டுச் சோர்வடைந்திருந்த காலம் அது. அதுவே எளிதில் திருக்கோவலூரின்மேல் படையெடுக்கத் தக்க செவ்வி என்பது அவன் எண்ணம். ஆதலின், இப்போதே படையெழுச்சி நடக்க வேண்டும் என்றான். அவன் உறவினர்கள் அவனுக்கு எதிராகச் சொல்லும் ஆற்றல்உடையவர்கள் அல்லரே! அவர்கள் ஔவையாரை அணுகித் தங்கள் கருத்தைச் சொன்னார்கள். அவர் அதிகமானிடம் சென்று போரைச் சிறிது தாழ்த்து மேற்கொள்ளலாமே என்றார். “காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும். சிறிது தாழ்த்தால் காரி மறுபடியும் ஊக்கம் பெற்று வலிமையுடையவனாகி விடுவான்” என்றான் அதிகமான்.

“இறைவன் திருவருளால் உனக்கு மகவு பிறக்கப் போகிறது. குழந்தை பிறந்தவுடன் பார்க்க வேண்டியது தந்தையின் கடமை. நீ அங்கே போரில் ஈடுபட்டிருக்கும்போது, இங்கே குழந்தை பிறந்தால் உன்னால் எப்படிக் காணமுடியும்? அதோடு, போரின் முடிவு என்னாகுமோ என்று உன் மனைவி அச்சத்தோடு இருப்பாளே! கருவுற்ற பெண்கள் மனம் மகிழ்ச்சியோடு இருப்பது இன்றியமையாதது.”

“போர் செய்வதே வாழ்க்கையாகப் போய்விட்ட எனக்குப் புதிய போர் என்றால் ஊக்கம் உண்டாகிறது. வீரக் குலத்திலே புகுந்த என் மனைவி நான் போருக்குச் செல்வது கண்டு அஞ்சுவதானால், அதைவிட இழுக்கான செயல் வேறு இல்லை. அவள் அப்படி அஞ்சுபவள் அல்லள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும் அவள் உவகையுடன் போய் வாருங்கள் என்று விடை கொடுத்தனுப்புவாள் என்றே நம்புகிறேன்.”