பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அதிகமான் நெடுமான் அஞ்சி


1.முன்னோர்கள்

தமிழ் நாட்டைப் பல மன்னர்கள் ஆண்டு வந்திருக்கிறார்கள். ஆயினும் அவர்களுக்குள்ளே மிகப் பழங்காலந் தொட்டு இடைவிடாமல் ஆண்டு வந்தவர்கள் சேர சோழ பாண்டியர்கள். இந்த மூவேந்தர்களின் பழமையை, 'படைப்புக் காலந் தொட்டே இருந்து வருபவர்கள்' என்று சொல்லிப் புலவர்கள் பாராட்டுவார்கள். தமிழ்நாடு மூன்று மண்டலங்களாகப் பிரிந்திருந்தது. சோழ மண்டலம், பாண்டிய மண்டலம், சேர மண்டலம் என்பவை அவை. அவற்றை ஆண்டுவந்த மன்னர்கள் மூவரையும் முடியுடை மூவேந்தர் என்று இலக்கியம் கூறும். அவர்களுடைய தலைமையின் கீழும், தனியேயும் பல சிறிய அரசர்கள் சிறிய சிறிய நாடுகளைத் தங்கள் ஆட்சிக்குரிமையாக்கி ஆண்டு வந்ததுண்டு; ஆனால் அவர்களுக்கு முடி அணியும் உரிமை இல்லை. பழங்கால முதல் தமிழ் நாட்டை ஆண்டு வந்த சேர சோழ பாண்டியர்களுக்கே அந்த உரிமை இருந்தது.

இந்த மூன்று மன்னர்களுக்கும் தனித்தனியே அடையாளப் பொருள்கள் இருந்தன. அவற்றில் சிறப்பானவை மாலையும் கொடியும். சேரன் பனை மாலையையும் விற்கொடியையும் உடையவன். சோழன்