பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

அதிகமான் நெடுமான் அஞ்சி

எவ்வளவு வலிமையுடையது! இப்பெருமையைப் பெரும் புலவராகிய பரணர் பாடினார். அவரே பாடுவதற்குரியவர்”[1] என்று தம் இன்ப உணர்ச்சியை வெளிப்படுத்தினர்.

இயல், இசை,நாடகம் என்று தமிழ் மூன்று வகைப்படும். இலக்கண இலக்கியங்கள் யாவும் இயல் தமிழைச் சார்ந்தவை. பண்ணும் பண்அமைந்த பாட்டும் இசைத் தமிழைச் சார்ந்தவை. கூத்தும் அதற்கு இனமாகிய வரி முதலியனவும் நாடகத் தமிழைச் சார்ந்தவை. ஔவையார்,பரணர்முதலியபெரும்புலவர்கள் அதிகமானுடைய புகழை அருமையான பாக்களால் பாடினார்கள். அவை இயற்றமிழ்ப் பாடல்கள். வேறு பலர் அதிகமான இசைத்தமிழ்ப் பாடல்களால் பாடினர். தாளத்தோடும் பண்ணோடும் அமைந்த அந்தப் பாடல்கள் கேட்க இனியனவாக இருந்தன. பண் அமைந்த பாடலை இக்காலத்தில் உருப்படிகள் என்று சொல்கிறார்கள். பழங்காலத்தில் உரு என்றே கூறினர். உரு என்பதிலிருந்து உருப்படி என்பது வந்தது.

அதிகமான் வீரத்தைப் பாடும் பல உருப்படிகளை இசைத் தமிழ் வல்லுநர்கள் பாடினார்கள். அவன் ஈகையைச் சிலர் பாடினார்கள். அவன் குலப் பெருமையைச் சிலர் போற்றினார்கள். இயற்றமிழ்ப் பாடல்களைத் தமிழறிவுடையவர்கள் யாவரும் பார்த்துப் பொருள் தெரிந்து இன்புறலாம். ஆனால் இசைத் தமிழ்ப் பாடல்கள் பொருள் அறிந்து மகிழ்வதோடு நிற்பதற்கு உரியன அல்ல. அவற்றை வாயாரப் பாடி இன்புற வேண்டும். அதிகமானப் பற்றிய இசைப் பாடல்கள் மிகுதியாக வந்தன. அவற்றை வாங்கி வாங்கி வைத்துக் கொண்டார்களேயன்றி எப்படிப் பாடவேண்டும், அவற்றிறகுரிய பண் எவை என்று தெரிந்து கொள்ளவில்லை.


  1. புறநானூறு, 99.