பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேரமான் செய்த முடிவு

61

என் உயிரே வெல்லமாக இருந்தது” என்று வருத்தம் ஒலிக்கும் குரலில் பேசினான் காரி.

“உமது வருத்தத்தை நான் நன்றாக உணர்கிறேன்; உம்முடைய ஊக்கமும் வலிமையும் உம்மை விட்டு எப்போதும் நீங்கா. ஆதலின் சோர்வு அடையாமல் இழந்த நாட்டைப் பெற வழி தேடவேண்டும்.”

“இப்போதுதான் எனக்கு நேர்ந்த விளைவுக்குக் காரணம் தெரிகிறது. மன்னர் பெருமானுடைய அவாவை நிறைவேற்ற நான் ஓரியை எதிர்த்துக் கொன்றேன். அது அறமல்லாத செயலாதலின் அதற்குரிய பயனை இப்போது பெறுகிறேன்.”

தனக்காக ஓரியைக் கொன்றதுதான் காரியின் இன்றை நிலைக்குக் காரணம் என்பதைப் பெருஞ்சேரலிரும்பொறை உணரவேண்டு மென்றே இப்படிப் பேசினான் மலையமான். அவ்வரசன் அதை நன்கு உணர்ந்தான். “எனக்குக் கொல்லிக் கூற்றத்தை ஓரியினிடமிருந்து கைப்பற்றித் தந்த வீரத்தை நான் மறப்பவன் அல்லன். எப்பாடு பட்டாவது உம்முடைய கோவலூரை அதிகமானிடமிருந்து உம்முடைய ஆட்சிக்கு வரச்செய்து பழையபடி உம்மை மலாட்டின் தலைவனாக ஆக்குவேன். நான் சேரர் குலத்தில் தோன்றியது உண்மையாயின் இந்தச் சொல்லை நிறைவேற்றுவேன்” என்று வீறுடன் வஞ்சினம் கூறினான் சேரன்.

அதைக் கேட்ட காரி உளம் மகிழ்ந்தான்; “அதிகமானை வெல்லுவது எளிய செயல் அன்று. பெரிய அகழி சூழ்ந்த வலிமையான கோட்டை அவனுக்கு இருக்கிறது. ஆற்றல் மிக்க வீரர்கள் செறிந்த பெரிய படையும் இருக்கிறது. ஆதலின் தீர ஆராய்ந்து வினையை மேற்கொள்ள வேண்டும்” என்றான்.

“நன்றாகவே ஆராய்ந்து தக்க முறையில் பெரிய படைகளைக் கூட்டி, யாரேனும் துணை வருவாரானால்

அதிக-5