பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேரமான் செய்த முடிவு

63

வரச் செய்தான். அவன் வஞ்சிமா நகரத்தில் இருக்கிறான் என்பதை உணர்ந்து பலர் அவனை வந்து அடைந்தார்கள். மீட்டும் போருக்கு ஏற்ற வகையில் தம்மை ஆயத்தம் செய்துகொண்டார்கள், அந்த வீரர்கள் அனைவரும். காரியின் போர் அநுபவமும் தன்னுடைய படையும் அதிகமானை வெல்லப் போதியவை என்று சேரமான் திண்ணமாக எண்ணினான். படை வகுப்பில் பேரணியாக இருப்பதைக் காரி தலைமை தாங்கி நடத்த வேண்டும் என்பது அவன் விருப்பம்.

சேரர் படையில் இருந்த தலைமை வீரர்களில் பிட்டங்கொற்றன் என்பவன் ஒருவன். அவன் குடியே வீரப் பெருங்குடி; சேர மன்னர்களுக்குத் தம்முடைய வலிமையைப் பயன்படுத்தும் பெருவீரர்கள் பிறந்த குலம். பிட்டங்கொற்றன் இளமை மிடுக்கும் போர்ப் பயிற்சியும் உடையவன். தானே தலைமை தாங்கிப் போரை நடத்தும் ஆற்றலை அவன் பெற்றிருந்தான். காரியும் பிட்டங்கொற்றனும் இணைந்துவிட்டால் தீயும் காற்றும் சேர்ந்துகொண்டது போலாகிவிடும். பிறகு அவர்களை எதிர்ப்பதற்கு எவரால் முடியும்? வேறு வீரர்களில் சேரனுடைய அன்புக்குச் சிறப்பாக உரியவரானவர் சிலர் உண்டு. அவர்களில் நெடுங்கேரளன் என்பவன் ஒருவன்; மீசை அரும்பிய முகமும் திரண்ட தோள்களும் எடுப்பான பார்வையும் இரும்புருளையைப் போன்ற வலிமையும் பெற்றவன். போரில் அவனை விட்டால் இடையிலோ கடையிலோ நிற்கமாட்டான். நேரே முன்னணிப் படையிலே போய் நிற்பான்.

இத்தகைய வீரர்களை ஒவ்வொருவராகத் தன் அகக் கண்ணிலே நிறுத்திப் பார்த்தான் சேரன். நெடுங்கேரளனே போதும் போரை வெல்ல; அவனால் இயலாதென்றால் பிட்டங்கொற்றன் எவ்வளவு பெரும். படை வந்து எதிர்த்தாலும் முன்னின்று பகைவரைச்