பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேரமான் செய்த முடிவு

65


“கொள்ளையிட்டு வந்ததைக் கொடுப்பது கொடையாகுமா? எவ்வளவு சிறந்தவனாக இருப்பினும் நாடு பிடிக்கும் ஆசை இருக்கும்வரைக்கும் அவன் கொடியவனே. படைப்பலத்திலே குறைந்தவர்கள், அவன் எந்தச் சமயததில் நம்மேல் படையெடுப்பானோ என்று அஞ்சிக் காலம் கடத்துகிறார்கள். அவன் நம் பெரு வீரரான காரி ஓய்ந்திருந்த சமயம் பார்த்து அவர் ஊரைத் தாக்கி ஊரை விட்டு ஓட்டிவிட்டானே!”

“காரணமின்றி ஓரியைத் தாக்கிக் கொன்றதற்காகவே அவன் கோவலூரைத் தாக்கினான் என்றல்லா புலவர்கள் பேசுகிறார்கள்?” என்று அரிசில்கிழார் கூறினர்.

“காரி கொல்லிக்கூற்றத்தை வசப்படுத்தாமல் இருந்திருந்தால் என்றேனும் ஒருநாள் அதிகனே கைப்பற்றியிருப்பான். அந்த நாடு கிடைக்கவில்லையே என்ற பொறாமையினால்தான் காரியின்மேல் சினம் கொண்டு கோவலூரை முற்றுகையிட்டான்.”

“ஒரு போரிலிருந்து மற்றொரு போர் தொடங்குகிறது. அதனால் அரசர்களுக்கு நலமோ, தீங்கோ, நாட்டில் வாழும் மக்களுக்குத் தீங்கே உண்டாகிறது. எப்போதும் போர் நடந்தால் மக்கள் எப்படி வாழமுடி யும்? கொல்லிப் போர் கோவலூர்ப் போரைக் கொண்டு வந்துவிட்டது. இப்போது கோவலூர்ப் போர் தகடூர்ப் போருக்கு வித்தாக வந்திருக்கிறது. யார் யாரோடு போர் செய்தாலும் பொதுவில் தமிழ்நாட்டில் வாளும் வாளும் வேலும் வேலும் மோதிய வண்ணமாயிருக்கின்றன” என்றார் சான்றோர் ஒருவர்.

“அண்ணன் தம்பிகளுக்குள் நடக்கும் போரை எண்ணுகையில் உள்ளம் சாம்புகிறது. அதிகமான் சேரர் குலத்திலிருந்து பிரிந்துபோன குடியினன். நம் மன்னர்பிரானுக்குத் தம்பி போன்றவன்.[1] அவன்


  1. தகடூர் யாத்திரை (புறத்திரட்டு, 776.)